முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கும், சிலைக்கும் அரசு சார்பில் அமைச்சர்களும், பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில் கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், எஸ்.எம்.நாசர் ஆகியோர் எம்ஜிஆர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ்குமார், பல்கலைக்கழக துணைவேந்தர் கே.நாராயணசாமி, தமிழ் வளர்ச்சித்துறை செயலர் வே.ராஜாராமன், செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா.வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.