கோபி : தினகரன் செய்தி எதிரொலியால் கோபி அருகே உள்ள எலத்தூர் குளம் மற்றும் நாகமலை குன்றை பல்லுயிர் தளமாக அறிவிக்க முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் செயலர் ஆய்வு மேற்கொண்டனர்.கோபி அருகே உள்ள நம்பியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்யும் மழை நீர் மற்றும் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தால் கிடைக்கும் பவானி ஆற்று நீரால் எலத்தூர் குளம் நிரம்பி உள்ளது.
பாறை பகுதிகள் நிறைந்த நீர்வழித்தடம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் பல வகையான தாவரங்களை உள்ளடக்கிய முட்புதர்க்காடு, கரைக்காடு, வறல் புல்வெளி, சதுப்பு நிலம், ஆழமான நீர் நிலைப்பகுதி, மண் திட்டுகள், ஏரிக்கரைக்காடு, புதர்கள் உள்ளிட்ட நுண் சூழலியல் அமைப்புக்களை இந்த குளம் பெற்றுள்ளது. இந்த குளத்தின் அருகே உயிரிப்பன்மயம் நிறைந்த குன்றான நாகமலை குன்றும் அமைந்துள்ளது.
இந்த ஆண்டு அழிவின் விளிம்பில் இருக்கும் பறவையான ஆற்று ஆலா, 10,000 கி.மீ மேல் பயணிக்கும் கருவால் மூக்கன், முதன்முறையாக கிழக்கு ஆசிய பகுதியில் இருந்து வலசை வந்துள்ள சாம்பல் தலை ஆள்காட்டி, அரிதாக தமிழ்நாட்டிற்கு வலசை வரும் கூம்பலகன், அரிதாக காணக்கூடிய சிவப்பு காணாங்கோழி, நீர்க் கோழி, செங்குருகு, கருங்குருகு பறவைகள் போன்ற பல பறவை இனங்கள் குளத்திற்கு வருகை தந்துள்ளன.
இரவு நேரங்களில் இமயமலை பகுதியிலிருந்து வந்திருக்கும் ஆயிரக்கணக்கான நீலவால் பஞ்சுருட்டான், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் இருந்து வந்திருக்கும் ஆயிரக்கணக்கான சூறைக் குருவிகள், உள்ளூர் பறவைகளான அன்றில்கள், கொக்குகள் வாத்துகள் என 10,000க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு தங்குகின்றன.
இத்துடன் தமிழ்நாட்டில் அரிதாக இனப்பெருக்கம் செய்யும் கம்பி வால் தகைவிலான் உள்ளிட்ட 64 வகையான உள்ளூர் பறவைகள் இங்கு இனப்பெருக்கம் செய்து வாழ்கிறது. இதுவரை 568 வகையான உயிரினங்கள் எலத்தூர் குளத்தில் வாழ்வதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 202 பறவைகள், 173 பூச்சி இனங்கள், 110 தாவர வகைகள், 16 ஊர்வன, 18 எட்டுக்காலிகள், 20 மிதவை நுண்ணுயிரிகள், 7 பாலூட்டிகள், 22 இதர பல்லுயிர்கள் உள்ளடங்கும்.
இவ்வாண்டிற்கான ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பில் 138 வகையான பறவை இனங்கள் இந்த குளத்தில் வசிப்பது பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் அதிக பறவைகள் வாழும் இடங்களில் இரண்டாவது முறையாக இக்குளம் முதலிடத்தையும், இந்திய அளவில் 22 வது இடத்தையும் பெற்றுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு நிகழ்ந்த ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பிலும் தமிழ்நாட்டில் முதலிடத்தை எலத்தூர் குளம் பெற்றது. மிகச் சிறப்பான உயிர்ச்சூழலுடன் பல வகையான பறவைகளுக்கும் பிற பல்லுயிர்களுக்கும் உணவளித்து வாழ்விடமாக விளங்கும் எலத்தூர் குளத்தையும் அருகில் உள்ள நாகமலை குன்றையும் பாரம்பரிய பல்லுயிர் தளமாக அறிவித்து பாதுகாத்திட வேண்டும் என சூழலியல் அமைப்பை சேர்ந்தவர்கள், பறவை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது தொடர்பாக கடந்த ஒரு வருடமாக தினகரன் நாளிதழில் ஏராளமான புகைப்படங்களுடன் செய்தி வெளியானது. இந்நிலையில் தொடர் செய்தி காரணமாக முதன்மை தலைமை வனப்பாதுகாவலரும் தமிழ் நாடு உயிரிப்பல் வகைமை வாரிய செயலாளருமான விஜேந்திர சிங் மாலிக் தலைமையில் எலத்தூர் குளம் மற்றும் நாகமலை குன்றில் கள ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வின்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் தலைமை வனப் பாதுகாவலர் ராஜ்குமார், ஈரோடு மாவட்ட வன அலுவலர் அப்பள நாயுடு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் யோகேச் குலால், உதவி வனப் பாதுகாவலர் லாவண்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
எலத்தூர் குளத்தின் சூழல் குறித்தும் பல்லுயிர்கள் பற்றியும் இவற்றை பாதுகாப்பது முக்கியத்துவம் குறித்தும், அங்கு நடப்பட்டுள்ள 130க்கும் மேற்பட்ட இயல் தாவரங்கள் குறித்தும் விளக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, எலத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் எலத்தூர் குளத்தின் பறவைகள் ஆவணப்படம் திரையிடப்பட்டது.
கடந்த ஆண்டு சூழல் அறிவோம் குழுவினரால் மறுசீரமைக்கப்பட்ட எலத்தூர் உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் குறித்தும், குழுவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும், சூழல் பாதுகாப்பில் மக்கள் பங்களிப்பு குறித்தும் சூழல் அறிவோம் குழுவினர் விளக்கினர்.
தொடர்ந்து நாகமலை குன்றுக்கு சென்ற குழுவினர், அங்குள்ள சூழல் குறித்தும் பல்லுயிர்கள் பற்றியும் குறிப்பாக அங்கு பத்து ஆண்டுகளாக இனப்பெருக்கம் செய்து வாழும் ராஜாளி கழுகு, இடைவரை, தேரை வகையான கந்தர் தேரை குறித்தும் அங்குள்ள தொல்லியல் சார்ந்த இடங்களையும் இவற்றை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் ஆய்வு செய்தனர். நாகமலை குன்றும் எலத்தூர் குளமும் எவ்வாறு ஒன்றோடு ஒன்று பல்லுயிர் உணவுச் சங்கிலி தொடர்பால் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
கடந்த 4 ஆண்டுகளாக இக்குளத்தையும், நாகமலை குன்றையும் பல்லுயிர் தளமாக அறிவிக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்த சூழலியல் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் செயலாளரின் ஆய்வு காரணமாக உற்சாகமடைந்து உள்ளனர்.
The post எலத்தூர் குளம், நாகமலை குன்றில் தலைமை வனப்பாதுகாவலர் ஆய்வு appeared first on Dinakaran.