‘லார்சன் அண்ட் டூப்ரோ’ பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் அண்மையில், “ஊழியர்கள் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில்கூட உங்களை வேலை செய்ய வைக்க என்னால் முடியவில்லை என்று வருத்தமாக உள்ளது. நான் ஞாயிற்றுக்கிழமைகளில்கூட வேலை செய்கிறேன். வீட்டில் ஓய்வு எடுப்பதால் என்ன லாபம் கிடைக்கப் போகிறது? வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்க முடியும்? அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள்” என்று தனது ஊழியர்கள் மத்தியில் பேசி இருந்தார்.
இதற்கு முன்னர், இன்ஃபோசிஸ் நாரயணமூர்த்தியும் இதேபோல கூறியிருந்த கருத்து சர்ச்சைக்குள்ளான நிலையில், சுப்பிரமணியனின் பேச்சுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் சேர்ந்துகொண்டதுதான் ஹைலைட். “உயர் பதவியில் இருப்பவர்களின் பேச்சுகள் அதிர்ச்சி அடையச் செய்கின்றன. எல்லாவற்றையும்விட மனநலனே முக்கியம்” என தீபிகா கமெண்ட் செய்திருந்தார். தீபிகாவின் கருத்துக்கு ஹார்ட்டினை அள்ளிவிட்ட நெட்டிசன்கள், இன்னொரு பக்கம் சுப்பிரமணியனை இன்னமும் திட்டிக்கொண்டிருக்கிறார்கள். – சிட்டி