‘சர்வ வல்லமை பொருந்திய’ நாடாக அறியப்படும் அமெரிக்காவின் 47-வது அதிபராகியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப். அதன் அதிர்வலைகள் இருக்கத்தானே செய்யும் என்பது போல் உலக நாடுகளுக்கான எச்சரிக்கை தொடங்கி உள்நாட்டிலேயே அதிரடி உத்தரவுகளும் அமலாகி வருகின்றன. “கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்..” என்று எல்ஜிபிடிக்யூ (LGBTQ) சமூகத்தினருக்காகவும், குடியேறிகளுக்காகவும் இறைஞ்சிய மதபோதகருக்கு, “அரசியலை தேவாலயத்துக்குள் கொண்டுவருவதா?” என்று கடுமை காட்டியுள்ளார் அதிபர் ட்ரம்ப்.
தனது முதல் உரையிலேயே “இனி ஆண், பெண் என இரண்டு பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம்” என ட்ரம்ப் முழங்கியது, இன வெறுப்பின் நீட்சியா என்று வாதவிவாதங்கள் எழுந்துள்ளன. தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் தன்பாலின திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆசிய நாடுகளில் தைவான், நேபாளத்துக்குப் பின்னர் இத்தகைய திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய மூன்றாவது நாடு, தென் கிழக்கு ஆசியா நாடுகளில் முதலாவது நாடு என்ற அந்தஸ்தை தாய்லாந்து பெற்றுள்ளது.