ஐதராபாத்: கர்நாடகாவில் துப்பாக்கி சூடு நடத்தி ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை அடித்து சென்ற திருடர்கள் ஐதராபாத்தில் போலீசாரிடம் இருந்து நூலிழையில் தப்பி ஓடி உள்ளனர். கர்நாடகா மாநிலம் பீதரில் உள்ள எஸ்.பி.ஐ ஏ.டி.எம் வங்கியில் பணம் எடுப்பதற்காக வங்கியை சேர்ந்த காவலர்கள் சென்றிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் பணம் கொண்டு சென்றவர்களை தடுத்து நிறுத்தி துப்பாக்கியால் சுட்டு ரூ.93 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து தப்பி சென்றனர்.
கொள்ளையடித்த கொள்ளையர்கள் ஐதராபாத்தில் உள்ள அப்சல் கன்சிற்கு நேற்று மதியம் 3.30 மணிக்கு வந்துள்ளனர். அங்கிருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் செல்வதற்காக தனியார் பேருந்தில் முன்பதிவு செய்துள்ளனர். இரவு 7 மணிக்கு பேருந்து செல்ல இருந்த நிலையில் மாலை 6.30 மணிக்கு பேருந்தில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளை பேருந்தில் ஏற்றிய டிராவல் ஏஜென்சியினர் பயணிகளின் உடமைகளை சோதனை செய்து வந்தனர்.
2 டிராவல் ஏஜென்சியினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது பேருந்தின் பின்புறத்தில் பீதரை சேர்ந்த போலீசார் வேறு ஒரு வழக்கில் விசாரணைக்காக ராய்பூர் செல்வதற்காக அங்கு அமர்ந்திருந்தனர். அப்போது சோதனைக்கு வந்த டிராவல் ஏஜென்சி ஊழியரிடம் தாங்கள் போலீசார் சோதனைக்காக செல்கிறோம் எங்கள் பைகளை சோதனை செய்ய வேண்டாம் என கூறி உள்ளனர். அதே நேரத்தில் டிராவல் ஏஜென்சியை சேர்ந்த உதவி நடத்துனர் ஜகாங்கீர் மற்ற பயணிகளை சோதனை செய்து வந்து கொண்டிருந்த போது வங்கி கொள்ளையர்கள் தங்கள் பைகளை சோதனை செய்ய வேண்டாம் ரூ.50,000 தருவதாக கூறி பணம் கொடுத்தனர்.
இதனால் சந்தேகமடைந்த ஜகாங்கீர் உடனடியாக கீழே இறங்கும்படி கூறினார். போலீசார் பின்னால் இருப்பதை கண்ட கொள்ளையர்கள் தங்களை பிடிப்பதற்காகவே கண்காணித்து வந்ததாக நினைத்து உடனடியாக கீழே இறங்கி ஜகாங்கீர் மீது துப்பாக்கி சூடு நடத்தி அங்கிருந்து தப்பி ஓடினர். இந்நிலையில் படுகாயம் அடைந்த ஜகாங்கீரை டிராவல் ஏஜென்சியினர், பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இத்தகைய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகிய நிலையில் இது குறித்து தகவல் அறிந்த அப்சல் கன்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளையர்கள் தப்பி சென்ற விதம், அதே பேருந்தில் கர்நாடகா போலீசார் பயணம் செய்தும் அவர்கள் யார் என்று தெரியாத நிலையில் கொள்ளையர்கள் தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையர்களை பிடிப்பதற்காக ஐதராபாத் போலீசார் 4 தனிப்படை அமைந்துள்ளதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று ஐதராபாத் துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
The post ஐதராபாத்தில் நூலிழையில் தப்பிய கர்நாடகா ஏடிஎம் கொள்ளையர்கள்: டிக்கெட் மேலாளரை சுட்டுவிட்டு திருடர்கள் மீண்டும் தப்பியோட்டம் appeared first on Dinakaran.