பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 டி 20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் டி 20 தொடர் வரும் 16-ம் தேதி கிறைஸ்ட் சர்ச் நகரில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வரும் 22-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரை கருத்தில் கொண்டு நியூஸிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் பலர் பாகிஸ்தானுக்கு எதிரான டி 20 தொடரில் சேர்க்கப்படவில்லை.
கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். மிட்செல் சாண்ட்னர், டேவன் கான்வே, லாக்கி பெர்குசன், கிளென் பிலிப்ஸ், ரச்சன் ரவீந்திரா ஆகியோர் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள உள்ளதால் பாகிஸ்தான் தொடருக்கு தேர்வாகவில்லை. பணிச்சுமையை கருத்தில் கொண்டு வேகப்பந்து வீச்சாளர்களான கேல் ஜேமிசன், வில் ரூர்க் ஆகியோர் முதல் 3 போட்டிகளில் மட்டும் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.