
ரெய்க்ஜாவிக்: ஐஸ்லாந்து நாட்டில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்நாட்டின் தலைநகருக்கு தென் மேற்கில் உள்ள ஜோஸ் (Kjós) என்ற பள்ளத்தாக்குப் பகுதியில் கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் உலகில் இதுவரை கொசுக்களே இல்லாத தேசம் என்ற தகுதியை ஐஸ்லாந்து இழந்துள்ளது. இப்போதைக்கு, ஐஸ்லாந்தை தவிர்த்து கொசுக்கள் இல்லாத இன்னொரு பகுதி என்றால் அது அன்டார்டிக்கா கண்டமாக அறியப்படுகிறது.
ஐஸ்லாந்தின் ஜோஸ் பகுதியில் இரண்டு பெண் கொசுக்களும், ஓர் ஆண் கொசுவும் கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் பூச்சியியல் துறை நிபுணர் ஜோர்ன் ஹிஜால்டாசன் கூறியுள்ளார். மேலும், இந்தக் கொசுக்கள் ‘Culiseta annulata’ என்ற இனத்தைச் சேர்ந்தவை என்றும், இவை எளிதில் கடும் குளிரை தாக்குப் பிடிக்கும் ரகம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ரக கொசுக்கள் ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் தென்படுபவை. ஆனால், இவை எப்படி ஐஸ்லாந்துக்கு வந்தன என்பது குறித்து தெரியவில்லை என்று ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த பூச்சியியல் துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

