*நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அருகே உத்திர காவிரி ஆற்றில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் குடிநீர் மாசு அடைவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.ஜவ்வாதுமலை தொடர்களில் உருவாகும் சிறு சிறு ஓடைகள் இணைந்து அவை பெரும் ஓடையாக உருவெடுத்து ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு பகுதியில் உள்ள உத்திர காவிரி ஆற்றை வந்தடைகிறது.
இந்த உத்திர காவிரி ஆறானது மேலரசம்பட்டு தொடங்கி வண்ணந்தாங்கல், சேர்பாடி, ஒடுகத்தூர், குருவராஜபாளையம், அகரம், பள்ளிகுப்பம், கீழ்கிருஷ்ணாபுரம், வெட்டுவானம் வழியாக பாலாற்றில் வந்து கலக்கிறது.சுமார் 25 கிமீ தூரத்திற்கு பாய்ந்தோடும் இந்த ஆறு ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
அதுமட்டுமின்றி, பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள், நூற்றுக்கணக்கான ஏரிகளுக்கு இது பெரும் உதவியாக இருந்து வருகிறது. இந்த உத்திர காவிரி ஆற்றில் மருத்துவ கழிவுகள், ஆடு, மாடு, கோழி இறைச்சி கழிவுகள் கொட்டி சிலர் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஒடுகத்தூர், குருவராஜபாளையம் பகுதிகளில் ஏராளமான கிளினிக் இயங்கி வருகிறது. இங்கு பயன்படுத்தப்படும் ஊசி, மருந்து பாட்டில்கள், குளுகோஸ் பாட்டில்கள், பஞ்சுகள் போன்ற மருத்துவ கழிவுகளை சரியான முறையில் கையாளாமல் சிலர் இரவு நேரங்களில் உத்திர காவிரி ஆற்றில் கொட்டி விட்டு செல்கின்றனர்.
அதேபோல், ஏராளமான ஆடு, கோழி, மாடு இறைச்சி கடைகளில் சேகரிக்கப்படும் இறைச்சி கழிவுகளையும் இந்த ஆற்றிலேயே மூட்டை மூட்டையாக வீசி விட்டு செல்கின்றனர்.
இதனால், குடிநீர் மாசு அடைவதோடு மட்டுமின்றி சுகாதார சீர்கேடுகளும் நிலவி வருகிறது. அதேபோல், மருத்துவ கழிவுகள் ஆற்றி கொட்டப்படுவதால் நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இறைச்சி மற்றும் மருத்துவ கழிகள் கலந்து வரும் தண்ணீரும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த தண்ணீர் பல கிராமங்கள் வழியாக கடந்து செல்வதால் அதனை குடிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் வந்து சேர்கிறது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இதில் தலையிட்டு மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளை ஆற்றில் கொடுப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஒடுகத்தூர் அருகே உத்திர காவிரி ஆற்றில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதால் மாசு அடையும் குடிநீர் appeared first on Dinakaran.