தமிழக ஆளுங்கட்சியான தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தைப் புறக்கணிக்க, எதிர்க்கட்சிகள் அதில் கலந்துகொண்டன.
சித்திரை முதல் நாளையும், தமிழ்ப் புத்தாண்டையும், பாரதியார் சிலை திறப்புவிழாவையும் முன்னிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்தளித்தார். முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து அழைப்பு சென்றது. முதன்முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து, வி.சி.க., மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க என தி.மு.க கூட்டணியிலுள்ள அத்தனை கட்சிகளும் தேநீர் விருந்தைப் புறக்கணித்தன. நீட் குறித்து இரண்டாவது முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், ஆளுநர் கிடப்பில் போட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் விருந்தைப் புறக்கணித்ததாகக் காரணம் கூறினர்.
கூட்டணிக் கட்சிகள் எல்லாமே புறக்கணிக்க, தி.மு.க மட்டும் கலந்துகொண்டால் அவப்பெயர் ஏற்படும் என்பதால், தி.மு.க சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்ரமணியன் ஆகியோர் ஆளுநரிடம் நேரடியாகவே சென்று சொல்லிவிட்டு வந்தனர்.
“யார் புறக்கணித்தாலும் அ.தி.மு.க புறக்கணிக்காது” என்று அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் சொன்னதற்கேற்ப, அக்கட்சியிலிருந்து எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம் ஆகிய நான்கு எம்.எல்.ஏ-க்கள் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். தமிழக பா.ஜ.க சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன், குஷ்பு ஆகியோரும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ஜி.கே.வாசனும் கலந்துகொண்டனர்