ஊட்டி : அஞ்சல்துறையில் பட்டுவாடாவை சீரழித்து தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து ஊட்டியில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு அஞ்சல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அஞ்சல் துறையின் முகமாக கருத்தப்படும் பட்டுவாடாவை சீரழித்து அஞ்சல்துறையை டெலிவரி, பிஒஎஸ்பி, பிஎல்ஐ என பல கூறுகளாக்கி தனியார்மயமாக்கும் பணிகளை ஒன்றிய அரசு வேகமாக செய்து வருகிறது.
தற்போது கொண்டு வந்துள்ள ெமக்கனைஸ்டு பீட் டெலிவரி என்பது பெட்ரோல் அலவன்ஸ் தருவதாக கூறி எதிர்காலத்தில் ஆட்குறைப்பு மற்றும் பீட் குறைப்பிற்கு வழிவகுக்கும். ஏற்கனவே என்டிசி மூலம் பட்டுவாடாவில் பல்வேறு குறைகள் இருக்க அதை போலவே நாடு முழுவதும் 19 ஆயிரத்து 500 பட்டுவாடா அஞ்சலகங்களின் பணியை 1900க்குள் சுருக்கி ஐடிசி எனப்படும் டெலிவரி முறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
கூரியர் நிறுவனங்களை போல மாலை நேர டெலிவரியை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது. இதுதவிர இலக்கு என்ற பெயரில் ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒன்றிய அரசின் இந்த ஊழியர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் ஐடிசி இன்டிபென்டன்ட் டெலிவரி சென்டர் கொண்டு வருவதை தொடக்க கட்டத்திலேயே எதிர்க்கும் விதமாக நீலகிரி கோட்ட அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள் – குரூப் சி, தபால்காரர் மற்றும் எம்டிஎஸ் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊட்டி தலைமை அஞ்சல் நிலையம் முன்பு மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க தலைவர் சந்திரமோகன் தலைமை வகித்தார். ஏஐபிஇயு குரூப்-சி தலைவர் ராமு, பிஎம் – எம்டிஎஸ் தலைவர் மாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் போஸ்ட் மாஸ்டர் ஆன்ட்ரூ ராபர்ட் நேசராஜா, கோட்ட செயலாளர் குமரேசன், சந்திரகுமார், தயானந்த், பிரகாஷ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தொடர்ந்து பட்டுவாடாவை சீரழிக்கும் ஐடிசி மெக்கனைஸ்டு பீட், டார்கெட் உள்ளிட்ட நெருக்கடிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 200க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி செயலாளர் வானதி நன்றி கூறினார்.
The post ஒன்றிய அரசை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.