ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள மீனவர்கள், அவர்களது படகுகளை மீட்காத ஒன்றிய அரசை கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் பிப். 28ம் தேதி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். தொடர்ந்து காத்திருப்பு போராட்டம், கஞ்சித்தொட்டி திறப்பு என இரவு பகலாக போராட்ட பந்தலில் தங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நான்காவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.
இலங்கை சிறையில் அபராத தொகையை செலுத்த முடியாமல் கைதிகளாக உள்ள மீனவர்களை மீட்க ஒன்றிய அரசு முன் வராததால், மீனவர்கள் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். கையில் திருவோடு ஏந்தி கதறி அழுதபடி, ‘‘சிறையில் உள்ள மீனவர்களுக்கு அபராத தொகை செலுத்த பிச்சை எடுக்கிறோம்… பிச்சை போடுங்கள்…’’ என தேசிய நெடுஞ்சாலையில் கூறியபடி சென்றது கண்ணீரை வரவழைத்தது. காலவரையற்ற வேலைநிறுத்தத்தால் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் ரூ.30 கோடி மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சார்பு தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகமே முற்றிலும் வெறிச்சோடி காணப்படுகிறது. மீனவர்கள் போராட்டம் நடத்திய இடத்திற்குச் சென்று, தமிழக அரசு சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் மீனவர்களின் கோரிக்கைகளை நேற்று கேட்டறிந்தனர்.
* சிறையில் உள்ள தந்தைக்கு மகள் உருக்கமான கடிதம்
இலங்கை சிறையில் இருக்கும் மீனவர் யாசினின், மகள் மிஸ்வா 11ம் வகுப்பு படிக்கிறார். போராட்டத்தில் கலந்து கொண்டு தனது தந்தையை நினைத்து உருக்கமான கடிதத்தை படித்தார். அதில், ‘‘கடல் எங்கள் தாய் என்றால் படகு எங்களை இணைக்கும் தொப்புள் கொடி தானே! பத்து வயதிலே ஆரம்பிக்கிறது மீனவ மக்களின் போராட்டம். ஓடி ஓடி உழைத்து கைரேகை தேய்ந்து, இலங்கை சிறையில் அடிமையாக கிடக்கிறார். தேர்வு எழுதச் செல்லும் நான் வென்றுவிட்டேன் என யாரிடம் கூறுவேன் அப்பா! தந்தை முகம் காணாமல் வாடுகின்ற எம்மை போன்ற பிஞ்சு நெஞ்சங்களை எண்ணி இரக்கம் காட்டாதா இலங்கை அரசு!’’ என எழுதியிருந்ததை கண்ணீர் சிந்தி வாசித்தார். இது ஓட்டுமொத்த மீனவர்களையும் மனம் உருக செய்தது.
* இன்று தீக்குளிக்கும் போராட்டம்
மீனவ சங்கத்தலைவர் ஜேசுராஜ் பேசுகையில், ‘‘நாட்டிற்கு பல ஆயிரம் கோடி அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் மீனவர்களை ஒன்றிய அரசு பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாக்கியுள்ளது. இது இந்திய அரசுக்கு அவமானமாகும். தமிழக மீனவர்களை இந்தியப் பிரஜையாக இந்திய அரசு கருத வேண்டும். ஒன்றிய அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டுஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், மீனவர்கள் மார்ச் 4ல் (இன்று) தீக்குளிக்கும் போராட்டத்தை முன்னெடுப்போம்’’ என்றார்.
The post ஒன்றிய அரசை கண்டித்து திருவோடு ஏந்தியபடி மீனவர்கள் போராட்டம்: ரூ.32 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு appeared first on Dinakaran.