ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்களின் காத்திருப்பு போராட்டம் மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. கருப்பு பேட்ஜ் அணிந்து, கஞ்சித் தொட்டி திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் ஆளுநர் திடீரென சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும், இலங்கை கடற்படை பறிமுதல் செய்த விசைப்படகுகளை மீட்டு தரக்கோரியும், மீனவர் பிரச்னையில் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் சாதிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில், மீனவ சங்கங்களின் சார்பில் நடக்கும் தொடர் காத்திருப்பு போராட்டம் மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
போராட்டப் பந்தலில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தங்கிய மீனவர்கள் மூன்றாம் நாளாக நேற்று சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர். அப்போது போராட்டக் களத்தில் கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.போராட்டத்தில் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்கள், மீனவர்கள், சார்பு தொழிலாளர்கள், பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு கட்சியினர், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவது தொடர்பான உறுதி அறிவிப்பு ஒன்றிய அரசிடமிருந்து வரும் வரை, போராட்டம் தொடரும் என மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தீக்குளிக்கும் போராட்டம்: தங்கச்சிமடத்தில் போராட்டம் நடத்தி வரும் மீனவர்கள், அடுத்தகட்டமாக இன்று திருவோடு ஏந்தி போராட்டம் நடத்த உள்ளனர். ஒன்றிய அரசு தங்கள் போராட்டத்தை கருத்தில் கொண்டு இந்தப் பிரச்னையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாளை (மார்ச் 4) தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவ சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், ராமேஸ்வரம் செம்மமடம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மன வளர்ச்சி குன்றியோர் மறுவாழ்வு மையத்தை திறந்து வைக்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வந்தார். ராமேஸ்வரம் வரும் வழியில் தங்கச்சிமடத்தில் மீனவர்களின் காத்திருப்புப் போராட்டக் களத்திற்கு சென்று மீனவர்களின் பிரச்னைகளை கேட்டு, கோரிக்கைகளை மனுவாக பெற்றார். அப்போது இலங்கை சிறையில் இருக்கும் மீனவர் ஜான் போஸ் மகன் ப்யூடன் (13) ஆளுநரை பார்த்ததும் கதறி அழுதான். இலங்கை சிறையில் இருக்கும் எனது தந்தையை மீட்க வேண்டும்.
எனது தந்தை சிறையில் இருப்பதால் எனது பள்ளி படிப்பும் பாதிக்கிறது என்று கண்ணீர் விட்டான். அப்போது ஆளுநர், சிறுவனை அணைத்து தட்டிக்கொடுத்து தேற்றினார். அதன்பின் ராமேஸ்வரத்தில் மனவளர்ச்சி குன்றியோர் மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து உள்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டார். அங்கு நடந்த மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து ராமநாதபுரத்தில் நடைபெற்ற பாஜ நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார்.
* அண்ணாமலைக்கு கண்டனம்
மீனவ சங்க பிரதிநிதி சகாயம், சேசுராஜ் கூறுகையில், ‘‘தங்கச்சிமடத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். ராமநாதபுரத்திற்கு வந்த பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, இங்கு நடக்கும் மீனவர்களின் போராட்டத்திற்கு வருகை தராதது கண்டனத்திற்கு உரியது. மீனவர்கள் கடத்தலுக்காக கடலுக்கு செல்கின்றனர் என அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். இது ஒட்டுமொத்த மீனவ சமூகத்தையும் அவமானப்படுத்தும் செயல். மீனவர்களின் போராட்டத்தை திசை திருப்புவதற்கு அண்ணாமலை இதுபோன்று இழிவான அரசியல் செய்கிறார். இதனை மீனவர்களின் சார்பில் கண்டிக்கிறோம்’’ என்றனர்.
* ஆளுநருக்கு எதிர்ப்பு
மீனவ சங்க பிரதிநிதி எமெரிட் கூறுகையில், ‘‘மீனவர்களின் போராட்ட பந்தலுக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி கோரிக்கை மனுக்களை பெற்று விட்டு சென்றார். பின்னர் அவரது எக்ஸ் தளத்தில், ‘கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது தான் மீனவர்கள் பிரச்னைக்கு காரணம்’ என்று பதிவிட்டுள்ளார். மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்துவார் என நம்பி இருந்த எங்களுக்கு, ஆளுநரின் இந்த பதிவு ஏமாற்றத்தையே அளிக்கிறது. மீனவர் பிரச்னையை தீர்க்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தாமல், இப்படி பதிவு செய்திருப்பது மீனவர்களை வஞ்சிக்கும் செயலாகும்’’ என்றார்.
* ஆளுநரை சந்திக்க மறுத்த மீனவர்கள்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ராமேஸ்வரம் வருகையையொட்டி, மீனவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் நிலவியதால், ஆளுநரை சந்திக்க வருமாறு மீனவர்களிடம் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது போராட்டக் களத்தில் இருந்த மீனவர்கள், தனியாக ஆளுநரை சந்திக்க மறுத்து விட்டனர். இந்த தகவல் ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆளுநர், போராட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அப்போது மீனவர்கள் கோரிக்கை வைத்தபோது, முயற்சி செய்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார். ஒன்றிய அரசை வலியுறுத்தும் இடத்தில் இருக்கும் ஆளுநர், இப்படி பேசி விட்டுச் சென்றது மீனவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
The post ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நீடிப்பு ராமேஸ்வரம் மீனவர்கள் கஞ்சித்தொட்டி திறப்பு: ஆளுநர் திடீர் சந்திப்பு appeared first on Dinakaran.