அமராவதி: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு சுமார் 350 காலணிகளை அனுப்பி உள்ளார் அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண். முன்னதாக, அந்த கிராமத்துக்கு சென்ற அவர், வயதான பெண்கள் காலணி அணியாமல் வெறுங்கால்களோடு நடப்பதைக் கண்டுள்ளார்.
உள்ளூர் மக்களின் நிறை, குறைகளை அறியும் வகையில் இரண்டு நாள் பயணமாக அரக்கு மற்றும் தம்ப்ரிகுடா பகுதிகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டார். அப்போது அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள பெதபாடு என்ற கிராமத்துக்கு சென்றிருந்தார். அப்போது அந்தக் கிராமத்தை சேர்ந்த வயதான பெண்கள் உட்பட பெரும்பாலானவர்கள் காலணிகள் அணியாமல் இருப்பதை ஜன சேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண் கவனித்தார்.