சென்னை: அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாமக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜ கூட்டணியில் பாமக இடம் பெற்றது. அந்த தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, 5 இடங்களில் வெற்றி பெற்றது. 2024 லோக்சபா தேர்தலில் பாஜ கூட்டணியில் அதிமுக இடம் பெறாத நிலையில் பாஜ கூட்டணியிலேயே பாமக நீடித்தது.
அதிமுக கொடுத்த ராஜ்யசபா சீட் அதிமுக- பாஜ- பாமக கூட்டணி அமைக்கப்பட்ட காலத்தில் பாமக தலைவர் அன்புமணிக்கு அதிமுக ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்தது. தற்போது அன்புமணியின் பதவி காலம் முடிவடைய இருக்கிறது. பாஜவுடன் கூட்டணியில் இருந்தாலும் அன்புமணிக்கு மீண்டும் ராஜ்யசபா எம்பியாக வாய்ப்பே கிடையாது என்பது உறுதியாகிவிட்டது. இதனால் பாமக மேலிடம் பாஜ மீது கடும் அதிருப்தியில் உள்ளது.
ராமதாசை பொறுத்தவரையில் அதிமுக கூட்டணி பக்கம் சாய்ந்துவிடலாம் என்பது அவரது நிலைப்பாடு. இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் ஜி.கே.மணி சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தார். அந்த சந்திப்பில் பாஜவின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதாகவும், சொன்ன வார்த்தையை காப்பாற்ற கூட முடியாத கட்சியாக பாஜ உள்ளதாகவும் ஜி.கே மணி தெரிவித்ததாக கூறப்படுகிறது.. அத்துடன் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ், அன்புமணி இருவருமே ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அப்போது ஜி.கே.மணி கூறியுள்ளார்.
அத்துடன் அதிமுகவுடன் கூட்டணியை பாமக உறுதி செய்துவிட்டால் அன்புமணிக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் கொடுப்பது பற்றியும் அடுத்த கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூலை மாதம் ராஜ்யசபா தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக அதிமுக- பாமக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* கல்யாண பத்திரிகையும்.. பாமக கூட்டணியும்…
2011-ம் ஆண்டு முதல்வராக கலைஞர், துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியில் இருந்தனர். அப்போது ராமதாஸின் பேரன் டாக்டர் சுகந்தனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க கலைஞரை நேரில் சந்தித்த ராமதாஸ், அன்று மாலையே திமுகவுடனான கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது தொடர்பாக பேரன் சுகந்தனின் திருமண விழாவில் பேசிய டாக்டர் ராமதாஸ், பேரன் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக கருணாநிதியின் வீட்டுக்கு சென்றேன்;
அப்படியே தொகுதி உடன்பாட்டையும் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு வெளியே வந்தேன் என்றார். இந்நிலையில், மீண்டும் திருமண பத்திரிகை கூட்டணி யுக்தி ஒரளவு நிறைவேறியுள்ளதாக தகவல் பரவி வருகிறது. பாமகவின் கவுரவ தலைவர் ஜிகே மணி, சமீபத்தில் சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பும் கூட, ஜிகே மணி இல்ல திருமண விழா அழைப்பிதழ் கொடுக்கத்தான் என்று கூறப்பட்டாலும், சந்தேகமே இல்லாமல் இது கூட்டணி பேச்சுவார்த்தைக்கான தொடக்கம்தான் என அரசியலாளர்கள் கருதுகின்றனர்.
The post ஒரே ஒரு கல்யாண பத்திரிகைதான் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாமகவுக்கு சம்மதமாம்… அன்புமணிக்கு அடிக்கிறது ராஜ்யசபா சீட் யோகம்? appeared first on Dinakaran.