சென்னை: ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் வாடிக்கையாளர் முன்னிலையில் சரக்குக்கு ஸ்கேன் செய்து ரசீது வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் தற்போது கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம் (வடக்கு), காஞ்சிபுரம் (தெற்கு) அரக்கோணம், ராமநாதபுரம், கரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் கணினி மயமாக்கப்பட்டு உள்ளது.
மது வாங்குபவர்களுக்கு ரசீது வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடை விற்பனையாளர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றாமல் தவறான செயல்பாடுகளில் ஈடுபடுவதாக டாஸ்மாக் நிர்வாகத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுபான சில்லரை விற்பனை கடைகளில் விற்பனையின் போது, நுகர்வோர் விரும்பி கேட்கும் மதுபானங்களுக்கு அதற்கான ரசீதுகள் கண்டிப்பாக வழங்கப்படவேண்டும்.
மதுபான சில்லரை விற்பனை கடைகளில் நுகர்வோர்களுக்கு மது பானங்களை விற்பனை செய்யும் போது மட்டுமே பாட்டிலை ஸ்கேன் செய்து விற்க வேண்டும். மதுபானங்களை முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டு விற்பனை செய்யக் கூடாது. இதனால் விற்பனைக்கும் இருப்புக்கும் வித்தியாசம் ஏற்படுகிறது. இதை கடைக்காரர்கள் சரி செய்ய வேண்டும்.
தவறான செயல்பாடுகளை கண்காணிக்க தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் மற்றும் உதவி மேலாளர் முழு பொறுப்பாவதோடு, துறை ரீதியான உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் வாடிக்கையாளர் வாங்கும் சரக்குக்கு அவர் முன்னிலையில் ஸ்கேன் செய்து ரசீது வழங்க வேண்டும். இதை செயல்படுத்திட ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் வாடிக்கையாளர் முன்னிலையில் சரக்கை ஸ்கேன் செய்து ரசீது வழங்க வேண்டும்: டாஸ்மாக் அறிவிப்பு appeared first on Dinakaran.