ஆர்லாண்டோ: அமெரிக்க விமானம் ஒன்று ஓடுபாதையில் சென்ற போது ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 282 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அமெரிக்காவின் ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் ஓடு பாதையில் மெதுவாக நகர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, பயணிகளை அவசரநிலை ‘ஸ்லைடு’ வழியாக வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், ‘அட்லாண்டாவிற்கு செல்ல தயாராக இருந்த விமானம் ஓடு பாதையில் நகர்ந்தபோது, அதன் இரு இயந்திரங்களில் ஒன்றில் தீப்பற்றியது. இந்த சம்பவத்தால் வலது இயந்திரத்திலிருந்து தீப்பிழம்புகள் வெளியேறின; இதனை விமான நிலைய முனையத்தில் இருந்த பயணி ஒருவர் செல்போன் மூலம் பதிவு செய்துள்ளார். அதையடுத்து விமானத்தில் இருந்த 282 பயணிகளும் அவசரநிலை ‘ஸ்லைடு’ வழியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானத்தின் இரு இயந்திரங்களில் ஒன்றின் வால் பகுதியில் தீப்பிழம்புகள் தோன்றியதை அடுத்து, டெல்டா விமானப் பணியாளர்கள் பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். பயணிகளின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கிறோம். பயணிகளை மாற்று விமானத்தில் அழைத்து செல்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட விமானத்தை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது.
The post ஓடுபாதையில் நகர்ந்து சென்ற போது விமானத்தில் ஏற்பட்ட தீயில் இருந்து 282 பயணிகள் மீட்பு: அமெரிக்காவில் பரபரப்பு appeared first on Dinakaran.