சென்னை: ஓடும் பேருந்தில் ரீல்ஸ் செய்த ஒப்பந்த ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கோயம்பேடு – கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் 70வி தடம் எண் கொண்ட பேருந்தில், ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணன், நடத்துநர் சிவசங்கர் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது, நடத்துநர் ரீல்ஸ் செய்தபடி ஓட்டுநர் அருகே வந்துள்ளார்.
இதைப் பார்த்த ஓட்டுநரும் அவருடன் ரீல்ஸ் செய்தவாறே பேருந்தை ஓட்டியுள்ளார். இந்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு பொதுமக்கள், போக்குவரத்து ஆர்வலர்கள் தரப்பில் கண்டனங்களும் எழுந்தன. இந்நிலையில், ஓட்டுநரையும், நடத்துநரையும் மாநகர போக்குவரத்துக் கழகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.