திருவள்ளூர்: ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் செல்போன், லேப்டாப் பறித்த வழக்கில் குற்றவாளிக்கு திருவள்ளூர் நீதிமன்றம் 17 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. பட்டாபிராம் மிட்டினமல்லி ரயில் நிலையத்தில் கடந்த 2023ம் ஆண்டு ரயிலில் பயணித்த கல்லூரி மாணவி வர்ஷாவிடம் லேப்டாப், செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பினார். இந்த சம்பவம் குறித்து மாணவி ஆவடி ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் சிவக்குமார் (45) என்ற நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் செல்போன், லேப்டாப்பை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பின்னர் அவர் ஜாமீனில் அவர் வெளியே வந்த நிலையில் அவர் மீதான வழக்கு திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இவ்வழக்கின் இறுதி விசாரணையில் கொள்ளையடித்த சம்பவம் உண்மை என நிரூபிக்கப்பட்டதால் திருவள்ளூர் நீதிமன்றம் சிவக்குமாருக்கு 17 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து ஆவடி ரயில்வே போலீசார் சிவக்குமாரை புழல் சிறையில் அடைத்தனர்.
The post ஓடும் ரயிலில் மாணவியிடம் செல்போன் பறிப்பு; குற்றவாளிக்கு 17 மாதங்கள் சிறை: திருவள்ளூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.