சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே 60 அடி கிணற்றில் காருடன் விவசாயி உயிரிழந்த நிலையில், சடலத்தை மீட்க கிணற்றுக்குள் குதித்த மீனவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட முள்ளிக்காபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (எ) யுவராஜ் (48). விவசாயியான இவருக்கு கௌரி என்ற மனைவியும் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையும் உள்ளனர்.
இவர் குடும்பத்துடன் தனது விவசாய தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சிவக்குமார் தனது உறவினர் காரை ஓட்டி பழகி உள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து கார் வீட்டின் முன்பு இருந்த 60 அடி ஆழ கிணற்றுக்குள் கவிழ்ந்து நீருக்குள் மூழ்கியது. இதில் மூச்சுத்திணறி சிவக்குமார் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினர், காரையும், சிவகுமாரையும் கிரேன் இயந்திரம் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கிணற்றில் சுமார் 40 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் நீருக்குள் மூழ்கி காரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மின் மோட்டார்கள் கொண்டு வரப்பட்டு நீரை இறைக்கும் பணி நடைபெற்றது. மீட்பு பணிக்காக பவானிசாகர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மீனவர் மூர்த்தி (42) என்பவர் வந்திருந்தார். அவர் கிணற்று நீரில் மூழ்கி மீட்க முயற்சித்தபோது அவரும் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் கிணற்றில் இருந்த தண்ணீர் முழுவதும் மோட்டார்கள் மூலம் இறைக்கப்பட்டு 9 மணி நேரம் போராடி கார் மற்றும் இருவரது சடலங்களும் கிரேன் இயந்திரம் மூலம் மீட்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இரு உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post ஓட்டி பழகியபோது விபரீதம் 60 அடி கிணற்றில் காருடன் விழுந்து விவசாயி பலி ; மீட்க சென்றவரும் சாவு: 9 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலம் மீட்பு appeared first on Dinakaran.