கேரளாவில் வரும் 27-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவா – தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மே 22-ம் தேதி (நேற்று) ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 36 மணி நேரத்தில் வலுவடைய கூடும். அதன் பிறகு இது மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது. இதனால் கேரளாவில் ஓரிரு நாட்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது. பின்னர் படிப்படியாக தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பரவக்கூடும். மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 27-ம் தேதி உருவாகக்கூடும்.