சென்னை : சென்னை மாநகராட்சியில் கடந்த மூன்று மாதங்களில் 1,00,118 மெட்ரிக் டன் கட்டிடம் மற்றும் இடிபாட்டு கழிவுகள் அகற்றப்பட்டு, மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் குமரகுருபரன் தெரிவித்தார்.சென்னை மாநகராட்சியில் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும் கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் அலுவலர்கள் நேற்று செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் செய்து பார்வையிட்டனர்.
இதில், முதற்கட்டமாக, கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் உருவாகும் இடத்தில் அகற்றும் நடவடிக்கையாக ஆலந்தூர் மண்டலம், நந்தம்பாக்கம், உட்கிரீக் கவுண்டி முதல் பிரதான சாலையில் கொட்டப்பட்டுள்ள கட்டிட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் நடவடிக்கைகள் பார்வையிடப்பட்டது. அங்குள்ள கட்டிடக் கழிவுகளை அகற்றி வாகனத்தில் ஏற்றி, இரண்டாம் நிலையான ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள சேகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட சேகரிப்பு மையமான ஆலந்தூர் மண்டலம், நந்தம்பாக்கம், எம்.ஜி.ஆர். நகரில் உள்ள சேகரிப்பு மையத்திற்கு வரப்பெற்ற கட்டிட கழிவுகள் பெரிய வாகனங்களில் ஏற்றப்பட்டது. இதனை ஏற்றும் போது, மண்துகள்கள் காற்றில் பரவாமல் இருப்பதற்காக தண்ணீர் தெளித்து வாகனங்களில் ஏற்றி, கட்டிடக் கழிவுகள் முழுமையாக மூடப்பட்ட நிலையில் வாகனம் மூலம் பெருங்குடியில் உள்ள மூன்றாம் கட்டமான கட்டிடக் கழிவுகள் பதப்படுத்தும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர், பெருங்குடி மையத்தில் உள்ள கட்டிடக் கழிவுகள் சேகரிப்பு மையத்திற்கு கொண்டு வரப்படும் கட்டிட இடிபாட்டுக் கழிவுகள் அங்கு அமைக்கப்பட்ட பதப்படுத்தும் பெரிய இயந்திரங்களின் வாயிலாக அவை மெல்லிய மணல், கரடுமுரடான மணல், 6 மி.மீ., 12 மி.மீ., 24 மி.மீ., கற்களாக முறையே பிரித்தெடுக்கப்படுவதைப் பார்வையிட்டனர். மறுசுழற்சியில் இப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் கூறியதாவது:கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை உருவாகும் இடத்திலிருந்து அப்புறப்படுத்தி, சேகரிப்பு மையங்கள் மற்றும் பிரித்தெடுக்கும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் டிப்பர் லாரிகள், மினி லாரிகள், ஜே.சி.பி வாகனங்கள், பாப்காட் வாகனங்கள் உள்ளிட்ட 201 வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஜனவரி 7ம் தேதியன்று கட்டிட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் தீவிர தூய்மைப் பணி தொடங்கி வைக்கப்பட்டது. 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் நாள்தோறும் சராசரியாக 1000 டன் கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்படுகிறது. ஜன.7ம் தேதி முதல் ஏப்.14ம் தேதி வரை 1,00,118 மெட்ரிக் டன் கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரர் அனைத்து பகுதிகளையும் வாரத்தில் மூன்று முறை ஆய்வு செய்து, அவ்விடங்களில் உள்ள கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை ஒப்பந்த முறைப்படி அகற்றவும், சாலைகளின் தூய்மையைப் பராமரிக்கும் விதமாக மாநகராட்சி அலுவலர்கள், திட்ட மேலாண்மைப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மேற்பார்வையாளர்கள் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளின் இருப்பிடத்தை தெரிவிக்க சென்னை மாநகராட்சியில் செயலி வடிவமைக்கப்பட்டு, அதன் மூலம் கட்டுமானக் கழிவுகளின் இருப்பிடங்கள் தெரிவிக்கப்பட்டு உரிய ஒப்புதல் பெற்ற பின் ஒப்பந்ததாரர் கழிவுகளை அகற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கழிவுகள் அகற்றப்பட்ட பின்னரும் அதனை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் சராசரியாக நாள்தோறும் உருவாகும் 1000 டன் அளவில் கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளில் குப்பை போன்ற கழிவுகள் கலக்கும் போது, மாநகரின் தூய்மை மற்றும் அழகியல் சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது.
அதனை தவிர்க்கும் பொருட்டு, கட்டிட கழிவுகளை சேகரித்து கட்டிடம் மற்றும் இடிபாட்டு கழிவுகளைப் பிரித்தெடுக்கும் மையத்தில் கொட்டப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் பொருட்களை மறுசுழற்சி செய்யும் விதமாக சென்னை மாநகரில் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் செயலாக்கத் தளம் அமைக்கப்பட்டு மே 2021 முதல் பயன்பாட்டில் உள்ளது.இவ்வாறு அமைக்கப்பட்ட செயல்பாட்டு தளங்களில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், அப்பகுதியில் சுற்றுச்சுவர், பசுமைப் பகுதி, சாலை வசதிகள், எடை மேடை மற்றும் மழைநீர் செல்லும் பாதை ஆகியவை அமைக்கப்பட்டு செயல்முறையில் உள்ளது. மேலும், செயலாக்கத்தின் போது தூசு வெளியேறாமல் தடுக்க நீர்த்தெளிப்பான் பயன்படுத்தப்பட்டு சுற்றுச்சூழலில் தூசு பரவாமல் பாதுகாக்கப்படுகிறது.
கட்டிடக் கழிவுகளின் செயலாக்கத்தின் மூலம் பெறப்படும் துணை பொருட்கள் அதாவது மணல், சிறுகற்கள், மத்திய நிலை கற்கள் மற்றும் பெருங்கற்கள் மறுசுழற்சி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. அதனை பெறும் நபர்கள் குறைந்த செலவில் சாலை அமைக்க, கான்கிரீட் பிளாக் சுற்றுச்சுவர் அமைத்தல், நடைபாதை கற்கள் தயாரித்தல் மற்றும் அடித்தளம் அமைக்க பயன்படுத்துகின்றனர்.
மேலும் சட்டவிரோதமாக கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை சாலைகள், நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கொட்டுபவர்கள் மீது ரூ.5,000 அபராத கட்டணம் வசூலிக்கப்பட்டும், தொடர் விதிமுறைகளை மீறுவோர் மீது காவல் துறையின் மூலம் உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
கடந்த ஜனவரி முதல் ஏப்.10ம் தேதி வரையிலான மூன்று மாத காலத்தில் சட்ட விரோதமாக கட்டிட கழிவுகளை கொட்டிய 284 பேர் மீது கண்காணிப்பு படையினரால் ரூ.14.20 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை தவிர்த்திடும் வகையில் பொதுமக்கள் கட்டிட இடிபாட்டுக் கழிவுகள் மேலாண்மைக்கான வழிமுறைகளை சென்னை மாநகராட்சியின் இணையதளத்திலும், மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணிலும் தொடர்பு கொண்டும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.
அப்போது கூடுதல் ஆணையாளர் ஜெயசந்திர பானு ரெட்டி, தெற்கு வட்டார துணை ஆணையர் அமித், தலைமை பொறியாளர் (பொது) விஜயகுமார், மேற்பார்வை பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) சங்கரவேலு, மண்டல அலுவலர்கள் முருகதாஸ், செந்தில் முருகன், பிரிமியர் பிரிசிசன் சர்பேஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் சீனிவாசன், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கட்டிடம் மற்றும் இடிபாட்டு கழிவுகள் பெருங்குடியில் உள்ள மையத்தில் மணல், ஜல்லி என தனித்தனியாக பிரித்தெடுக்கப்படுவதை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் நேரில் ஆய்வு செய்கிறார். அருகில், கூடுதல் ஆணையர் ஜெயசந்திர பானு ரெட்டி, தெற்கு வட்டார துணை ஆணையர் அமித். உள்படம்: கட்டிட கழிவுகள் பிரித்தெடுக்கும் மையம்.
3 மாதத்தில் 1863 புகார்கள்
சென்னை மாநகராட்சிப் பகுதியினை சுத்தமாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் மாற்றுவதற்கு மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பெரிதும் ஒத்துழைப்பு கொடுத்து, தங்களது மற்றும் தங்கள் சுற்றுப்புறங்களில் உள்ள கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்ற வேண்டுமெனில் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். 1913 மூலமாக மூன்று மாத காலங்களில் 1863 புகார்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு அனைத்து புகார்களும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
4,85,264 டன் மறுசுழற்சி
சென்னை மாநகரில் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள இரண்டு செயலாக்கத் தளங்கள் அமைக்கப்பட்டு வணிக ரீதியான சான்றிதழ் ஏப்.20ம் தேதி வழங்கப்பட்டு, அந்த நாள் முதல் மார்ச் 31ம் தேதிவரை 5,20,032 டன் கட்டிடக் கழிவுகள் செயலாக்கத் தளத்தில் பெறப்பட்டு, 4,85,264 டன் கட்டிடக் கழிவுகள் மறுசுழற்சியாக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட செயலாக்க தளங்களில் பலனாக, 5,20,032 டன் கட்டிடக் கழிவுகள் குப்பை கொட்டும் வளாகத்தில் கலக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. 4,85,264 டன் அளவிலான கட்டிடக் கழிவு மறுசுழற்சி பொருட்கள் உருவாக்கப்பட்டு, பொதுவெளியில் கொட்டப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. மாநகரின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
The post கடந்த 3 மாதங்களில் 1,00,118 மெட்ரிக் டன் கட்டிட கழிவுகள் அகற்றம் appeared first on Dinakaran.