மதுரை: கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் வணிக வரித்துறையில் ரூ.10 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார். பதிவுத்துறை மாநிலப் பணி மற்றும் அரசு அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மதுரை மாவட்டம் ஆலாத்தூரில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் செந்தூர் பாண்டியன், பொதுச்செயலாளர் உத்தமசிங் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டார்.
பின்னர் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் அமைச்சரிடம் முன் வைத்தனர். பொதுக்குழுவில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது : கடந்த 3 ஆண்டுகளாக நமது அதிகாரிகள் எந்த அளவிற்கு பணியாற்றி உள்ளார்கள் என்பது நமக்கு தெரியும். இன்று அரசுக்கு வரக்கூடிய வருவாயில் 87 சதவீதத்தில் நாம் உள்ளோம். மற்ற எல்லா துறையையும் பார்க்கையில் நமது துறைதான் முழுமையாக அரசுக்கு வருவாய் ஈட்டித் தருகிறது.
கடந்த ஆண்டை விட பதிவுத்துறை ரூ.2,200 கோடி இந்த ஆண்டு கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட வணிக வரித்துறையில் 10 ஆயிரம் கோடிக்கு மேல் இந்த ஆண்டு வருவாய் ஈட்டியுள்ளது. இதற்கெல்லாம் நீங்கள் உணர்வுடன் பணியாற்றியதால் தான், இந்த நிதி அரசுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு முதல்வரை பொறுத்தவரை எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை அறிவித்து அதை சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கிறார்.
பதிவுத்துறையில் பணியாற்றுவோருக்கு 17 பி மெமோ வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இது தொடர்பாக உள்ள சிலவற்றை சரி செய்துவிட்டு, நிச்சயமாக கமிட்டி அமைத்து பரிசீலிக்கப்படும். பதிவுத்துறையில் சட்டத்திட்டத்திற்கு உட்பட்ட அனைத்தும் செய்து தரப்படும். இவ்வாறு கூறினார்.
The post கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வணிக வரித்துறையில் ரூ.10 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் பி.மூர்த்தி பேச்சு appeared first on Dinakaran.