சென்னை: வங்கக் கடலில் தற்போது வலுபெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில், கிழக்கு – வடகிழக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, அதன் பிறகு, கடலில் படிப்படியாக வலுவிழக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேற்று (டிச.20), மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை 5.30 மணி அளவில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கிழக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (டிச.21) 8.30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், விசாகபட்டினத்துக்கு (ஆந்திரா) தெற்கு – தென்கிழக்கே சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும், கோபல்பூரிக்கு (ஒடிசா) தெற்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது, அடுத்த 12 மணி நேரத்தில், கிழக்கு – வடகிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மெதுவாக நகர்ந்து, அதன் பிறகு, கடலில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.