நெய்வேலி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நெய்வேலியில் நடந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் ஒரு கி.மீ., நடந்து சென்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது ஏராளமான குழந்தைகள், மாணவ, மாணவிகள் என பலரும் முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் 4 ஆண்டுகளாக நிறைவேற்றி வரும் பல்வேறு திட்டங்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, முன்னேற்றம் தொடர்பாக அந்தந்த மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று களஆய்வு செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக, கடலூர் மாவட்டத்தில் நேற்றும் இன்றும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று மாலை நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதன் பின்னர் நெய்வேலிக்கு சென்ற முதலமைச்சர் அங்கு மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி 5000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இரவு நெய்வேலி விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று காலை 9 மணி அளவில் வேப்பூர் திருப்பெயரில் நடைபெறும் பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாட்டிற்கு புறப்பட்டு சென்றார். அப்பொழுது நெய்வேலி நேரு சிலை அருகில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகள் தமிழக முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த மனுக்களை முதல்வர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ஜவகர்லால் நேரு சிலை, பெரியார் சதுக்கம், எம்ஜிஆர் சிலை, மத்திய பேருந்து நிலையம், எட்டு ரோடு சந்திப்பு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கையில் பதாகைகள் ஏந்தி பலூன்கள் வைத்துக்கொண்டு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கலைஞர் சிலை அருகே காரைவிட்டு இறங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் சிலையின் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் பொதுமக்களை பார்த்ததும் உடனடியாக காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றார்.
அப்போது வழி நெடுகிலும் நின்றிருந்த பெண்கள், குழந்தைகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். முதல்வருக்கு மேற்கு மாவட்ட ெசயலாளரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான சி.வெ.கணேசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெய்வேலி 30 வது வட்டம் சூப்பர் பசாரில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வழிநெடுகிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். மேலும் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் முதல்வருடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர். பின்னர் வேப்பூர் திருப்பெயரில் உள்ள தனியார் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெற்ற பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திண்டிவனம் வழியாக முதலமைச்சர் சென்னை சென்றடைந்தார்.
The post கடலூரில் இன்று 2ம் நாள் கள ஆய்வு: நெய்வேலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘ரோடு ஷோ’.! 1 கி.மீ தூரம் நடந்து சென்று மனுக்களை பெற்றார் appeared first on Dinakaran.