கடலூர்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கவும் 2 நாள் பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) கடலூர் மாவட்டத்துக்கு செல்கிறார். அப்போது, கடலூர் மாவட்டத்தில் ரூ.1,476 கோடியில் 6,68,000 பொதுமக்கள் பயன்பெறும் ரூ.479 கோடி மதிப்பிலான குடிநீர் வழங்கும் திட்டம் உட்பட 602 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார். 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார், 45,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை புறப்படும் முதலமைச்சர் மதியம் புதுச்சேரிக்கு வந்து தனியார் ஓட்டலில் மதிய உணவை முடித்துவிட்டு சிறிது நேரம் ஓய்வுக்கு பின்னர், மாலை 4 மணி அளவில் கடலூருக்கு செல்கிறார். அங்கு பொதுமக்களிடம் ரோடுஷோ மூலம் மனுக்களை பெறுகிறார். மாலை 5 மணி அளவில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்கும் விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். பின்னர் கடலூரில் இருந்து புறப்பட்டு வடலூர் வழியாக நெய்வேலிக்கு செல்கிறார்.
அங்கு மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதையொட்டி வடலூரிலும் ரோடு ஷோ நடத்தி பொதுமக்களிடமிருந்து முதல்வர் கோரிக்கை மனுக்களை பெறுகிறார். பின்னர் இரவு நெய்வேலி என்எல்சி சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். நாளை (22ம் தேதி) காலை வேப்பூரில் உள்ள திருப்பெயரில் தனியார் பள்ளியில் நடைபெறும் ‘பெற்றோரை கொண்டாடுவோம்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் அங்கு மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடுகிறார். இதன் பின்னர் காலை 11 மணி அளவில் வேப்பூரில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் வழியாக சென்னை திரும்புகிறார்.
The post கடலூரில் இன்று முதல் 2 நாள் சுற்றுப்பயணம்: ரூ.1,476 கோடியில் திட்டங்களை முதல்வர் திறந்து வைக்கிறார்: 45,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.