*தாசில்தாரிடம் வாக்குவாதம்- பரபரப்பு
கடலூர் : கடலூர் அருகே தொழிற்சாலை அமைக்க ஆய்வு செய்ய வந்த குழுவினருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொழில் மேம்பாட்டு திட்டத்திற்காகவும், வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையிலும் தமிழக அரசு பல்வேறு தொழில் முதலீடுகளை உலக அளவில் ஈர்த்து வருகிறது.
இதுபோன்ற தொழில் வளர்ச்சிக்காக தொழில் வழிகாட்டி நிறுவனமும் தமிழக அரசின் துறைகளில் ஒன்றாக செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மாசில்லா வகையில் கிராமப் பகுதிகளில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், காலணி உற்பத்தி என பல்வேறு வகையான தொழிற்சாலைகளை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கடலூர் எம் புதூர் பகுதியில் உள்ள மலை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடம் இருக்கின்ற நிலையில் சம்மந்தப்பட்ட பகுதியில் ஏற்கனவே பேருந்து நிலையம் அமைப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. புதிதாக புறவழிச் சாலையில் அமைக்கப்பட்ட நிலையில் கிராமப் பகுதிகள் நிறைந்த எம் புதூர் சுற்றுப்புற பகுதிகளை கருத்தில் கொண்டு தொழிற்சாலை அமைக்கலாமா என இடம் தேர்வு செய்வதற்காக கடலூர் தாசில்தார் பலராமன் தலைமையில் தொழில் வழிகாட்டி நிறுவனத்தினர் சிப்காட் தரப்பினர் ஆய்வு செய்ய வந்தனர்.
இதற்கிடையே எம் புதூர், அரிசி பெரியாங்குப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் தொழிற்சாலை அமைத்தால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கும், மாசு ஏற்படும். எனவே இப்பகுதியில் தொழிற்சாலை அமைக்க கூடாது என தாசில்தார் பலராமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து குழுவினரும் கிராம மக்களின் நிலைப்பாட்டை உணர்ந்து புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கேட்டபோது.: தொழிற்சாலை உற்பத்தி என்பது கிராமப் பகுதிகளில் தற்போது வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
காலணி உற்பத்தி, உணவு வகைகள் தயாரிப்பு என மாசில்லா வகையில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு அறிவுறுத்தியதன்பேரில் சம்பந்தப்பட்ட எம் புதூர் பகுதியை பார்வையிட வந்தோம். வெளிநாட்டில் செயல்படும் சர்வதேச நிறுவனத்தின் மூலம் காலணி உற்பத்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலை அமைக்கலாமா என ஆய்வு செய்ய வந்த நிலையில் முழுமையான தகவலை அறியாமல் கிராம மக்களின் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
நூற்றுக்கணக்கானவர்களுக்கு இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கின்ற நிலையில் கிராமப் பகுதி முன்னேற்றமும் பிரதானமாக அமையும். தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட கிராம மக்களிடம் கண்டிப்பாக கருத்து கேட்ட பின்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால் அதற்குள் இதுபோன்று செயல்படுவது என்பது வளர்ச்சி தடைப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது என தெரிவித்தனர்.
The post கடலூர் அருகே தொழிற்சாலை அமைப்பு? ஆய்வு செய்ய வந்த குழுவினருக்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.