திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு குறித்து தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் சுமார் 30 அடி தூரத்திற்கு 7 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் சில பகுதியில் கடல் நீரும் சுமார் 50 அடி தூரத்திற்கு வெளியே வந்தும், பாறைகள் தெரிந்த வண்ணம் உள்ளது. கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் பாதுகாப்பு கருதி தடுப்பு வேலிகளால் அடைக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் கனிமொழி எம்பி, அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய கடலோர ஆராய்ச்சி மைய தலைமை விஞ்ஞானி ராமநாதன் தலைமையில் 9 விஞ்ஞானிகள் கொண்ட குழுவினர் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் இருந்து அமலிநகர் வரை கடற்கரையோரம் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.
மேலும் கோயில் பணியாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களிடம் கடல் அரிப்பு குறித்து கேட்டறிந்தனர். பின்னர் விஞ்ஞானி ராமநாதன் கூறுகையில், டிரோன் சர்வே மூலம் நாளை (இன்று) ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் முடிவுகள் அனைத்தும் இயக்குநரிடம் தெரிவிக்கப்பட்டு அதன்படி ஆலோசனை கூட்டம் நடத்தி அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார். இதேபோல் திருச்செந்தூர் கடற்கரையில் சென்னை ஐஐடி குழுவினரும் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
The post கடல் அரிப்பு தடுப்பு குறித்து திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் தேசிய விஞ்ஞானிகள் குழு ஆய்வு appeared first on Dinakaran.