வாஷிங்டன்: இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்று அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் தீவிரவாதி தஹாவூர் ராணா (64) மனு தாக்கல் செய்தார். கடந்த 2008ம் ஆண்டு மும்பை நகருக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் தாஜ் ஓட்டல், ஒபேராய் ஓட்டல்,நரிமன் இல்லம், சிஎஸ்எம்டி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். நாட்டை யே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் 6 அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
அஜ்மல் கசாப் என்ற ஒரு தீவிரவாதி மட்டும் பிடிபட்டான். பின்னர் அவன் தூக்கிலிடப்பட்டான். மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை சேர்ந்தவரும் கனடா குடியுரிமை பெற்றவருமான தஹாவூர் உசேன் ராணா(63) என்பவரை கடந்த 2009ல் அமெரிக்க போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து இவர் சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்க கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில், கடந்த 2013ல் ராணாவுக்கு 14 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே ராணாவை நாடு கடத்தக் கோரி அமெரிக்காவிடம் இந்திய அரசு கோரிக்கை வைத்தது.
இதையேற்று, நாடு கடத்த நீதிமன்றம் 2023ல் உத்தரவு பிறப்பித்தது. நாடு கடத்தலுக்கு தடை கோரி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ராணா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தான். இந்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி வழங்கியது. இதையடுத்து, எந்த நேரத்திலும் அவன் நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தன் கடைசி வாய்ப்பாக, இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு உடனடியாக தடைவிதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தான். பாகிஸ்தான் வம்சாவளி முஸ்லிம் என்பதால் இந்தியாவில் தன்னை கொடுமைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது என மனுவில் குறிப்பிட்டிருந்தான்.
இந்த மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் தஹாவூர் ராணாவின் கடைசி முயற்சியையும் தோல்வியில் முடிந்தது. விரைவில் தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவான் என்பது உறுதியாகி உள்ளது.
The post கடைசி முயற்சியையும் சுக்குநூறாக்கியது அமெரிக்கா உச்சநீதிமன்றம்: விரைவில் நாடுகடத்தப்படுகிறார் தஹாவூர் ராணா appeared first on Dinakaran.