வாடிகன் சிட்டி: கத்தோலிக்க திருச்சபையின் 266வது தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். அவருக்கு வயது 88. நுரையீரல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில் திரும்பிய நிலையில் போப் பிரான்சிசின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கத்தோலிக்க மதத்தலைவர் போப் பிரான்சிஸ் நிமோனியா மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக கடந்த பிப்ரவரி 14ம் தேதி இத்தாலியின் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுவயதிலேயே கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிசுக்கு அப்போதே அறுவைசிகிச்சை மூலம் நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. இதனால் தனது வாழ்நாள் முழுவதும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், 2 நுரையீரல்களிலும் தொற்று பரவியது. இதைத் தொடர்ந்து 38 நாள் சிகிச்சை பெற்ற அவர் கடந்த மார்ச் 23ம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வாடிகனுக்கு திரும்பினார். சிகிச்சைக்கு பின் போப் பிரான்சிசின் உடல் நிலை தேறி வந்த நிலையில், நேற்று முன்தினம் ஈஸ்டர் பண்டிகையையொட்டி, வாடிகனின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில் அவர் பங்கேற்றார்.
சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட போப் பிரான்சிஸ், 35 ஆயிரத்துக்கும் மேல் கூடியிருந்த மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்து கூறி ஆசீர்வதித்தார். அதைத் தொடர்ந்து அவரது ஈஸ்டர் செய்தி வாசிக்கப்பட்டது. இந்நிலையில், ஈஸ்டர் திங்களான நேற்று உள்ளூர் நேரப்படி காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ் காலமானார். பிரான்சிஸ் வாழ்ந்த டோமஸ் சான்டா மார்ட்டா தேவாலயத்தில் இருந்து வாடிகன் காமெர்லெங்கோ கர்தினால் கெவின் பெரெல் இத்தகவலை உறுதிப்படுத்தினார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘புனித தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறேன்.
இன்று காலை 7:35 மணியளவில் ரோம் பிஷப் பிரான்சிஸ் அவர்கள் தந்தையின் இல்லத்திற்கு (கடவுள்) திரும்பினார். அவரது வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கும் அவருடைய திருச்சபைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. நற்செய்தியின் விழுமியங்களை உண்மையோடும், தைரியத்தோடும், உலகளாவிய அன்போடும் குறிப்பாக ஏழைகள் மற்றும் மிகவும் ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும் வாழ அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார்’ என கூறப்பட்டது. போப் பிரான்சிசின் மறைவு அறிவிப்பை தொடர்ந்து, ரோம் முழுவதும் உள்ள தேவாலய கோபுரங்களில் மணிகள் ஒலிக்கப்பட்டன.
அர்ஜென்டினாவில் பிறந்த போப் பிரான்சிசின் இயற் பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ. கடந்த 2013 மார்ச் 13ல் போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் மூலம் முதல் லத்தீன் அமெரிக்க போப் ஆண்டவர் என்ற பெருமையை பெற்றார். இவருக்கு முன்பாக போப்பாக இருந்த 16ம் பெனடிக் திடீரென ராஜினாமா செய்திருந்தார். 600 ஆண்டுகளுக்கு பிறகு போப் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்ததால் திருச்சபையின் நெருக்கடியான காலகட்டத்தில் பதவியேற்ற போப் பிரான்சிஸ் தனது சிறப்பான நிர்வாகத்தால் வாடிகனின் பெருமையை மீட்டெடுத்தார்.
போப் ஆண்டவராக அவர் தனது 12 ஆண்டு கால பதவியில் வாடிகனில் பல்வேறு சீர்த்திருத்தங்களை மேற்கொண்டார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள 140 கோடி கிறிஸ்தவ மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. உலகம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். வாடிகனில் அடுத்த 9 நாட்கள் நடக்கும் இறுதி சடங்கு நிகழ்வுகளுக்குப் பிறகு போப் பிரான்சிசின் உடல் அவரது விருப்பப்படி வாடிகனுக்கு வெளியே ரோம் நகரின் சான்டா மரியா மாகியோர் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட உள்ளது. முன்னதாக, செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக பிரான்சின் உடல் வைக்கப்பட்டு பல்வேறு பாரம்பரிய சடங்குகள் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து பாரம்பரிய வழக்கப்படி புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார்.
* இறுதி செய்தி
எப்போதும் ஏழைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த போப் பிரான்சிஸ், தனது இறுதி செய்தியாக ஈஸ்டர் அறிக்கையில், இஸ்ரேல்-ஹமாஸ், உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தி இருந்தார்.
* எளிமையானவர் சீர்த்திருத்தவாதி
போப் ஆண்டவராக பதவியேற்றதில் இருந்து போப் பிரான்சிஸ் வாடிகனில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல எனக் கூறிய அவர் அதை குற்றமாக்கும் சட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தினார். மரண தண்டனை குறித்த தேவாலயத்தின் நிலைப்பாட்டை மாற்றினார், எல்லா சூழ்நிலைகளிலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குரல் கொடுத்தார். அணு ஆயுதங்களை வைத்திருப்பது மட்டுமல்ல, அவற்றின் பயன்பாடும் ஒழுக்கமற்றது என வலியுறுத்திய போப் பிரான்சிஸ், இஸ்ரேல்-ஹமாஸ் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரை உடனடியாக கைவிடவும் பலமுறை வலியுறுத்தினார்.
அரேபிய நாடுகளுக்கும் ஈராக்கிற்கும் பயணம் செய்ததன் மூலம் இஸ்லாமிய சமூகத்துடனும் புதிய உறவுகளை விரிவுபடுத்தினார். தேவாலயத்தின் அதிகாரத்தில் இருந்து பெண்கள் தடுக்கப்படுகிறார்கள் என்று நீண்டகால புகார்களைத் தொடர்ந்து, திருச்சபைகளில் விரிவுரையாளர்களாகவும் உதவியாளர்களாகவும் பெண்கள் பணியாற்ற அனுமதித்தார். மேலும், வாடிகன் கூட்டங்களில் பிஷப்புகளுடன் சேர்ந்து பெண்களையும் வாக்களிக்க அனுமதித்தார். போப்களுக்கான ஆடம்பரங்களை தவிர்த்த பிரான்சிஸ் பேருந்துகளில் பயணம் செய்தார். போப் ஆண்டவர்களுக்கான பிரத்யேக சிவப்பு நிற காலணிகளை அணியாமல் தனது பழைய கறுப்பு நிற காலணிகளையே கடைசிவரை அணிந்தார். சிறிய கார்களையே பயன்படுத்தி எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்.
* வாழ்க்கைக் குறிப்பு
1936ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சில் பிறந்தவர் போப் பிரான்சிஸ். இவரது இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ. மாரியோ, ரெஜினா சிவோரி தம்பதியின் 5 குழந்தைகளில் மூத்தவர் போப் பிரான்சிஸ். அர்ஜென்டினாவில் 1969ல் ஜேசுட் பாதிரியாராக நியமிக்கப்பட்ட பிரான்சிஸ் பல்வேறு பொறுப்புகளைத் தொடர்ந்து 1992ல் பியூனஸ் அயர்சின் ஆர்ச் பிஷப் ஆக உயர்ந்தார். 2001, பிப்ரவரி 21ல் 2ம் ஜான் பால் மூலம் இவர் கர்தினலாக அறிவிக்கப்பட்டார். 2013 மார்ச் 13ல் 266வது போப் ஆக தேர்வு செய்யப்பட்டார்.
* வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்படுகிறார் போப் பிரான்சிஸ்
போப் பதவியில் இருப்பவர்கள் பெரும்பாலும் வாடிகனில் தான் அடக்கம் செய்யப்படுவது வழக்கம். 2024 நவம்பரில், போப் பிரான்சிஸ் தனது இறுதிச் சடங்கிற்குப் பயன்படுத்தப்படும் சடங்குகளை சீர்திருத்தினார். அவர் தன்னை வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்ய அனுமதித்தார். ரோம் நகரில் உள்ள சான்டா மரியா மாகியோர் பசிலிக்காவில் தனது உடலை அடக்கம் செய்ய ஏற்கனவே பிரான்சிஸ் தேர்ந்தெடுத்துள்ளார். அங்கு அவருக்குப் பிடித்த கன்னி மேரியின் சின்னமான சாலுஸ் பாபுலி ரோமானி உள்ளது.
The post கத்தோலிக்க திருச்சபையின் 266வது தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்: உலகம் முழுவதும் துக்கம் அனுசரிப்பு; தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.