டொரந்தோ: கனடாவின் புதிய பிரதமர் யார் என்பதை மார்ச் 9ம் தேதி ஆளும் லிபரல் கட்சி அறிவிக்கும் என கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். கனடாவில் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு லிபரல் கட்சி மற்றும் பொதுமக்களிடையேயே ஆதரவு வெகுவாக குறைந்தது. இதனை தொடர்ந்து கடந்த திங்களன்று அவர் தனது ராஜினாமா முடிவை அறிவித்தார். இதனை தொடர்ந்து புதிய பிரதமரை ஆளும் லிபரல் கட்சி தேர்வு செய்வதற்கான செயல்முறையில் ஈடுபட்டுள்ளது. புதிய பிரதமர் யார் என்பதை அறிவிக்கும் வரை ஜஸ்டின் பிரதமராக நீடிப்பார்.
இந்நிலையில் லிபரல் கட்சியின் தலைவர் சச்சித் மெஹ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வலுவான மற்றும் பாதுகாப்பான நாடு தழுவிய செயல்முறைக்கு பின் கனடாவின் லிபரல் கட்சியானது மார்ச் 9ம் தேதி ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும். மேலும் 2025ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற தயாராக இருக்கும்” என்று குறிப்பிட்டு இருந்தார். எனினும் தற்போது தேர்வு செய்யப்படும் பிரதமர் கனடா வரலாற்றிலேயே மிக குறைந்த காலம் பதவியில் இருந்த பிரதமராக அறியப்படுவார். மார்ச் 24ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடியவுடன் லிபரல் கட்சியின் மைனாரிட்டி அரசை கவிழ்ப்பதற்காக மூன்று எதிர்க்கட்சிகளும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு உறுதிபூண்டுள்ளன. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலம் என கூறி வருகின்றார். மேலும் அனைத்து கனடா பொருட்களுக்கும் 25சதவீதம் வரி விதிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
* பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் போட்டி
கனடாவில் மார்ச் 9ம் தேதி புதிய பிரதமர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று லிபரல் கட்சி அறிவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக இந்திய வம்சவாளியை சேர்ந்த எம்பியான சந்திரா ஆர்யா பிரதமர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவில் பிறந்த சந்திரா ஆர்யா ஒட்டாவாவின் நேபியன் எம்பியாக இருந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் லிபரல் கட்சியின் கூட்டத்திற்கு முன்னதாக தான் போட்டியிடப்போவதாக அவர் அறிவித்தார்.
The post கனடாவின் புதிய பிரதமர் மார்ச் 9ல் அறிவிப்பு appeared first on Dinakaran.