தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக கோவை வளர்ந்துள்ளது. தொழில், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்று பலவித காரணங்களுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் கோவைக்கு குடிபெயர்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவையில் வாடகை வீட்டில் வசித்து வரும் எல்லோருக்கும் சொந்த வீடு வாங்கிக் குடியேற வேண்டும் என்ற கனவு நிச்சயம் இருக்கும்.
ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மாதாந்திரச் சம்பளம் கைக்கும், வாய்க்கும், வரவுக்கும், செலவுக்கும் சரியாக அமையும். வாழ்க்கையில் வீடு என்பது தொடர்ந்து வரும் கனவாக அமைந்து விடுகிறது. கையில் இரண்டு லட்சம் புரட்ட முடியும் என்னும்போது வீட்டின் விலை நான்கைந்து லட்சங்களாக இருக்கும். கையில் நான்கைந்து லட்சங்கள் வந்து விழும் போது வீட்டின் விலை பத்து இருபது லட்சங்களைத் தொட்டு நிற்கும்.