சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி மாவட்டத்தில் இருந்து பல்லாயிரம் டன் கணக்கிலான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு நாள்தோறும் பலநூறு லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும், தமிழ்நாட்டில் இருப்பதைப்போல பலமடங்கு கனிம வளங்களை வைத்திருக்கும் கேரள மாநிலம் அவற்றை அழியவிடாமல் பாதுகாப்பதோடு, தமிழ்நாட்டில் உள்ள கனிம வளங்களை சுரண்டி எடுத்துச் செல்லும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி வாழ் மக்கள் தங்களது ஆதங்கத்தைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
கனிம வளங்களை கொண்டுசெல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை சிறிதும் மதிக்காமல், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிம வளங்களை அள்ளிச் செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் பல்வேறு விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையோடு தெரிவிக்கின்றனர்.மக்கள் நலன் கருதி கனிம வள கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், அதிமுக தென்காசி வடக்கு மாவட்டத்தின் சார்பில், வருகிற 6ம் தேதி (நாளை மறுதினம்) காலை 10 மணியளவில், செங்கோட்டை அம்மா உணவகம் அருகில் அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
The post கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்வதை கண்டித்து 6ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு appeared first on Dinakaran.