நாகர்கோவில்: கன்னியாகுமரி கடற்கரையில் கடல் நீச்சல்குளம் அமைப்பது பற்றி ஆராய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள வேண்டுகோள் விடுத்துள்ளனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால், வழக்கத்தை விட அதிகமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் உள்ளது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்ைற கண்டு ரசிக்கிறார்கள். பின்னர் நடுக்கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்கிறார்கள். கடல் நடுவே உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையையும் ரசிக்கிறார்கள். தற்போது விவேகானந்தர் நினைவு மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பாலத்தில் நடந்து சென்றவாறு கடல் அழகை ரசிக்க முடியும் என்பதால், பாலம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பால பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.
இந்த மாத இறுதியில் பணிகள் முடிக்கப்படலாம் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சுமார் 7,400 சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டதாக கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவதால், இன்னும் அதிகளவில் வசதிகள் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கன்னியாகுமரிக்கு வரும் அனைவரும் கடலில் குளித்து விட்டு புனித நீராக கன்னியாகுமரியில் இருந்து கடல் தண்ணீரை எடுத்து சென்று வருகின்றனர். இவ்வாறு கடலில் குளிக்கும் போது கடல் அலை உள்ளே இழுத்து சென்று உயிரிழப்பு ஏற்படுகிறது. நேற்று கூட வட மாநில சுற்றுலா பயணிகள் உயிரிழந்தார். தற்போது கன்னியாகுமரியில் கடலில் குளிப்பதற்கு போதிய இடவசதி இல்லை.
எனவே கன்னியாகுமரி கடற்கரையில் சுமார் 300 மீட்டர் நீளம் கொண்ட கடல் நீச்சல் குளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நீச்சல் குளம் அமைக்க கடற்கரை ஓரமாக உள்ள உயர் காட்சி கோபுரம் அருகில் சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு கடல் அரிப்பை தடுப்பதற்கு என்று கற்கள் போடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் சுமார் 25 முதல் 50 மீட்டர் அகலத்துடன் கூடிய கான்கிரீட்டால் ஆன கடல் நீச்சல் குளம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. இது குறித்து சுற்றுலாத்துறை ஆய்வு செய்ய வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.
வட மாநிலங்களில் கடல் நீச்சல் குளம் அதிகளவில் உள்ளன. கன்னியாகுமரியில் இது போன்று அமைத்தால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் பயனடைவார்கள் என்ற கருத்தும் உள்ளது. இந்த நீச்சல் குளத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதற்கு என்று சுமார் 100 மீட்டர் நீளத்தில் கடல் அலை இல்லாத இடமாக தேர்வு செய்து ஒதுக்கீடு செய்ய வேண்டும். மீதமுள்ள இடங்களில் ஆண்கள் குளிப்பதற்கு இடத்தை தேர்வு செய்யலாம். இது போன்ற கடல் தண்ணீர் கொண்டுள்ள நீச்சல் குளம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கும். மேலும் தற்போது திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டு வெள்ளி விழா என்பதை இதை நினைவு கூறும் வகையில் கடல் நீச்சல் குளம் அமைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த ஆராய வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.
The post கன்னியாகுமரியில் ‘ கடல் நீச்சல் குளம் ’ அமைக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.