*சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி
குன்னூர் : எவ்வித பாதுகாப்பின்றி ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பது போல, குன்னூர் பேருந்து நிலையத்தில், சுமார் 80 அடி உயரத்தில் வர்ணம் பூசும் பணிகள் நடப்பது சமூக ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் பேருந்து நிலையத்தில் ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கோடை சீசன் வரவுள்ள நிலையில், கோடை காலத்திற்கு முன்பு பணிகளை முடிப்பதற்கு நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் பேருந்து நிலையத்தின் சீரமைப்பு பணிகளில் தற்போது வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒப்பந்தம் அடிப்படையில் 20 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பேருந்து நிலைய கோபுரத்தின் மீது, சுமார் 80 அடி உயரத்தில் வர்ணம் பூசும் பணிகளில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக இவ்வாறு உயரத்தில் நின்று வேலை செய்து வரும் தொழிலாளர்கள், தங்களின் உயிரை பாதுகாக்கும் வகையில் உடலில் கயிறு கட்டியோ, முறையாக ஏணிகள் வைத்தோ பணிகள் மேற்கொள்ளவில்லை எனவும், 3 மணல் மூட்டைகளில் மர கம்பத்தின் மூலம் உயரமான இடத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
எனவே இதன் ஒப்பந்ததாரர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கி பணிகள் வழங்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே கடந்த 1955 ஆம் ஆண்டு இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டதாகவும், அப்போதைய தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மூலம் இப்பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நிலையில் இதன் வரலாறுகள் குறித்து கல்வெட்டுகள் பேருந்து நிலைய சுவற்றில் பதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த கல்வெட்டுகள் உடைத்து, நொறுக்கப்பட்டது. இதனால் பேருந்து நிலையம் கட்டப்பட்ட ஆண்டு மற்றும் வரலாறுகள் அடையாளம் இல்லாமல் போனது.
இதனை தொடர்ந்து பேருந்துகள் நிறுத்தப்படும் பக்கவாட்டு நடைபாதைகளில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் அனைத்தும் பழைய கற்கள் எனவும், இதனை புதிய கற்கள் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிப்பதற்கு பாலீஸ் செய்து பதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தொடர்ந்து இந்த பணிகள் மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர் மற்றும் அவர் செய்து வரும் பணிகள் மூலம் புகார் எழுந்த வண்ணம் உள்ளது. எனவே குன்னூர் நகர மக்களுக்காக பேருந்து நிலையம் சீரமைப்பு பணிகளுக்கு நகராட்சி நிர்வாகத்தினர் போராடி பெற்ற ரூ.1.19 கோடி நிதியை முறையான ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கி, தரமான பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ‘கரணம் தப்பினால் மரணம்’ குன்னூர் பஸ் நிலையத்தில் 80 அடி உயரத்தில் வர்ணம் பூசும் பணிகள் appeared first on Dinakaran.