கோபி : கோபி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சியை, புதியதாக உருவாக்கப்பட்ட கவுந்தப்பாடி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி ஊராட்சியுடன் அருகில் உள்ள சலங்கபாளையம் மற்றும் பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சிகளை இணைத்து புதிய கவுந்தப்பாடி நகராட்சியாக உருவாக்கப்பட்டது. இதற்கு ஏற்கனவே பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் சலங்கபாளையம் பேரூராட்சியை கவுந்தப்பாடி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தர்மாபுரியில் இருந்து ஊர்வலமாக சென்று பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பேரூராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறியதாவது, சலங்கபாளையம் பேரூராட்சியில் மொத்தம் 42 குக் கிராமங்கள் உள்ளன. இது தவிர செந்தாம் பாளையம்,கவுண்டம்பாளையம்,சலங்கபாளையம்,இரட்டை வாய்க்கால்,குன்னத்தூர் கடை,பேராயூர், கொட்டாப்புளிமேடு,கிருஷ்ணாபுரம், பெரியா கவுண்ட வலசு ,ஐயன் வலசு,மணி புறம்,ஈஞ்சரம் ,ஏறப்ப நாயக்கனூர்,மேட்டூர், மின்ன வேட்டுவம்பாளையம்,குட்டிபாளையம்,நெசவாளர் காலனி,தர்மபுரி, மாற நாயக்கனூர், சின்னா நாயக்கனூர்,அஞ்சல் பாதை உள்ளிட்ட கிராமங்களும் உள்ளது.
இந்த பேரூராட்சி பகுதியில் 4 ல் மூன்று பங்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. இது தவிர கைத்தறி நெசவு தொழிலில் தான் அதிகளவு அப்பகுதி பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஊராட்சியாக உள்ள கவுந்தப்பாடிநை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, அதனுடன் சலங்கபாளையம் பேரூராட்சியை இணைக்கும் போது இங்குள்ள சுமார் 18 ஆயிரம் பேரும் பாதிக்கப்படுவர். அதனால் சலங்கபாளையம் பேரூராட்சியை கவுந்தப்பாடி நகராட்சியுடன் இணைக்க கூடாது என்று பேரூராட்சியில் மனு அளித்து இருக்கிறோம் என்றனர்.
The post கவுந்தப்பாடி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு சலங்கப்பாளையம் பேரூராட்சி முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.