காங்கயம்: காங்கயம் அருகே நத்தக்காடையூர் ஊராட்சி குப்பை கிடங்கில் பற்றிய தீயால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் சுற்று வட்டார மக்கள் 2 நாட்களாக கடும் அவதி அடைந்து வருகின்றனர். காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நத்தக்காடையூர் ஊராட்சியில் 70க்கும் மேற்பட்ட சிறு கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் சந்தைப்பேட்டையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த, குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் சிலர் அடிக்கடி தீ வைக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இதே போல் மர்ம நபர்கள் குப்பை கிடங்கில் தீ வைத்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்த நிலையில், கடந்த 2 நாட்களாக குப்பை கிடங்கில் இருந்து மூச்சு விட முடியாத அளவில் நச்சு புகை வெளியேறி வருகிறது. இதனால், ஈரோடு-பழனி பிரதான சாலையை ஒட்டி குப்பை கிடங்கு உள்ளதால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு துர்நாற்றத்துடன் புகை மூட்டமாக காணப்படுகிறது. மேலும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் புகை பரவியுள்ளதால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பல தரப்பட்டவர்களும், ஆஸ்துமா, உள்ளிட்ட சுவாச கோளாறு உள்ளவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
குப்பை கிடங்கு பிரச்சனை குறித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் பல முறை கூறியும் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், உடனடியாக நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த குப்பை கிடங்கு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால், பல்வேறு சுகாதார கேடு பிரச்சனைகள் வருகிறது. மக்கள் பாதுகாக்க இருக்க, குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
The post காங்கயம் அருகே நத்தக்காடையூர் ஊராட்சி குப்பை கிடங்கில் 2 நாட்களாக எரியும் தீ: புகை மூட்டம் சூழ்ந்துள்ளதால் பெண்கள், குழந்தைகள் கடும் அவதி appeared first on Dinakaran.