காசா: பாலஸ்தீனத்தின் காசாவுக்குள் உதவிகள் வரத் தொடங்கி இரண்டு நாட்கள் ஆன நிலையில், தேவைப்படும் புதிய பொருள்கள் இன்னும் மக்களைச் சென்று சேரவில்லை என்றும், மூன்று மாதங்களாக இஸ்ரேலின் முற்றுகையில் இருக்கும் காசாவில், சுமார் 20 லட்சம் மக்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சத்தின் ஆபத்தில் இருக்கிறார்கள் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஹமாஸ்களுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக காசாவுக்குள் உணவு, மருந்து பொருள்கள் மற்றும் எரி பொருள்கள் செல்லுவதை இஸ்ரேல் தடுத்த நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்தில் குறைந்த அளவு மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி அளித்தது. உதவிகள் காசாவுக்குள் நுழையத் தொடங்கி இருக்கும் நிலையில், இஸ்ரேல் படைகளின் கெடுபிடிகளால் புதிய பொருள்கள் தேவைப்படும் மக்களைச் சென்று சேர்வதில் சிக்கல் நீடிப்பதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.