காசா: அக்டோபரில் இருந்து காசாவுக்கு 12 லாரிகளில் மட்டுமே உணவு, தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆக்ஸ்ஃபாம் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டப்பட்ட அறிக்கையில், “வடக்கு காசாவுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட 34 லாரிகளில் கடந்த இரண்டரை மாதத்தில் வெறும் 12 லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் ராணுவம் வேண்டுமென்றே காட்டிய கெடுபிடிகளால் உணவு, தண்ணீரை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது. இத்தகைய கெடுபிடிகளால் காசாவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் ஆக்ஸ்ஃபாம் சுட்டிக் காட்டுகிறது.
மேலும், “மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் ராணுவம் இரக்கமின்றி நடந்து கொள்கிறது. உணவு, தண்ணீர் லாரிகளை எடுத்துச் செல்ல அத்தனை அனுமதியும் கிடைத்த பின்னரும் கூட ஜபாலியாவில் தேவையே இன்றி லாரிகளை தடுத்து நிறுத்துகிறது. மேலும், ராணுவப் பகுதிகளில் உணவு, தண்ணீரை இறக்கிவைக்க ஓட்டுநர்களை நிர்பந்திக்கிறது. கடந்த மாதம் மட்டும் 11 லாரிகள் இவ்வாறாக நிறுத்திவைக்கப்படன.” என்று ஆக்ஸ்ஃபாம் குற்றஞ்சாட்டியுள்ளது.