புதுடெல்லி: கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஹர்கத் உல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த 5 தீவிரவாதிகள் கடத்தினர். இந்த விமானம் ஆப்கானிஸ்தானின் காந்தகாருக்கு கடத்தி செல்லப்பட்டது. விமானத்தில் 178 பயணிகள், 2 விமானிகள், 13 ஊழியர்கள் என 193 பேர் இருந்தனர்.
அவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு சார்பில் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்படி இந்திய சிறைகளில் இருந்த 3 தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டு, விமான பயணிகள் மீட்கப்பட்டனர். இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கடத்தலுக்கு தீவிரவாதி அப்துல் ரவூப் அசார் என்பவர் மூளையாக செயல்பட்டார்.