பெலகாவி: மகாத்மா காந்தி ஒரு தீவிர இந்து என்றும், காங்கிரஸ் கட்சி காந்தியின் இந்துத்துவாவை காங்கிரஸ் கட்சி நம்புகிறது என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடகாவின் பெலகாவியில் மகாத்மா காந்தியின் சிலை இன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், காங்கிரஸ் தலைவர் கார்கே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிலை திறப்பு விழாவில் பேசிய சித்தராமையா, "காந்தியை 'இந்து விரோதி' என்று பாஜக சித்தரிக்கிறது. இது 100 சதவீதம் பொய். மகாத்மா காந்தி தொடர்ந்து ராமரைப் பிரார்த்தித்தார். நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்ட தருணத்திலும் கூட, அவரது கடைசி வார்த்தைகள் ‘ஹே ராம்’ என்பதாகத்தான் இருந்தது. இது அவரது பக்தியையும், அவர் பின்பற்றிய இந்து மதத்தையும் பிரதிபலிக்கவில்லை என்றால், வேறு எதை பிரதிபலிக்கிறது?