திருபுவனை: சென்ைன கேளம்பாக்கம் தையூர் பகுதியை சேர்ந்தவர் சுசிலா பிரசன்னா (37). இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரை பார்க்க சுசிலா பிரசன்னா, இவரது உறவினரான விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த பிரபாகரன் (57), இவரது மனைவி ஏஞ்சலினா (50), மகள் ஷானி பிரெய்லி (12) ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வாடகை காரில் சென்றுள்ளனர். காரை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சந்திரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
நள்ளிரவு விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை மதகடிப்பட்டு அருகே வந்தபோது, லிங்கரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கதிரவன் (52) மற்றும் முகிலன் (37) ஆகியோர் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி மற்றொரு காரில் சென்று கொண்டிருந்தனர். இரண்டு கார்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக ேமாதிக்கொண்டன. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் இரு கார்களின் முன்பகுதியும் அப்பளம்போல நொறுங்கியது. இதில் கதிரவன், முகிலன், ஏட்டு பிரபாகரன், டிரைவர் சந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர். சுசிலா பிரசன்னா, ஏஞ்சலினா, ஷானி பிரெய்லி ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து புதுச்சேரி மேற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கார்கள் நேருக்கு நேர் மோதல் போலீஸ் ஏட்டு, 3 பேர் பலி appeared first on Dinakaran.