சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசுகையில், வரலாறு காணாத கனமழை திருவண்ணாமலையில் பெய்ததன் காரணமாக மலையில் 3 இடங்களில் சரிவு ஏற்பட்டு அதில் 7 பேர் மறைந்து இருக்கிறார்கள். முதல்வர் உத்தரவுக்கிணங்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக வந்து பார்வையிட்டு ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கி இருக்கிறார். கார்த்திகை தீபம் என்பது அண்ணாமலையார் கோயிலுடைய முக்கிய திருவிழாவாகும். தீபத்தன்று ஆண்டுதோறும் 2000 பேர் மலை ஏறுகிறார்கள். ஆனால் இந்த முறை அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? அதற்காக என்ன திட்டங்களை அரசு அமைத்திருக்கிறது” என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: கார்த்திகை தீபத் திருவிழாவில் மலையின் உச்சியில் கொப்பரை தீபம் ஏற்றப்படுவது இன்றியமையாத ஒன்றாகும். ஆன்மிக சான்றோர்கள் காலத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த விழா தடைப்படக்கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கின்றார். அந்த உத்தரவிற்கேற்ப சரவணன் ராஜா தலைமையில் 8 நபர்களை கொண்ட ஜியாலஜி கமிட்டி அமைக்கப்பட்டு, அக்குழுவினர் கடந்த டிசம்பர் 7,8,9 ஆகிய 3 நாட்கள் கள ஆய்வு செய்து இருக்கின்றனர்.
அந்த ஆய்வின் அடிப்படையில் முதல்வரிடத்தில் இன்றைக்கு அளித்திருக்கின்ற அறிக்கையின்படி, 350 கிலோ எடை கொண்ட கொப்பரை மற்றும் திரிகளையும், முதல்நாள் 40 டின்கள் மூலம் 600 கிலோ நெய்யும், பிற நாட்களில் தேவைக்கேற்ப தீபத்திற்கான நெய்யும் மலை உச்சிக்கு எடுத்து செல்லும் வகையில் எவ்வளவு மனித சக்தி அதற்கு பயன்படுத்த வேண்டுமோ அவ்வளவு மனித சக்திகளை பயன்படுத்தி எந்த. விதமான சிறு அசம்பாவிதமும் ஏற்படாமல் இந்த தீபத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆகவே சூழ்நிலைக்கு ஏற்றார்போல் தேவையான மனித சக்திகளை பயன்படுத்தி, கார்த்திகை தீபம் இந்த ஆண்டும், மலையின் உச்சியின் மீது எரியும். இவ்வாறு அவர் கூறினார்.
The post கார்த்திகை தீபத் திருவிழாவில் திருவண்ணாமலையின் உச்சியில் தீபம் எரியும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.