சென்னை: “தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தலா 50 மெகாவாட் திறன்கொண்ட சூரிய ஒளி மின்னுற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து 3 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் இன்று வரை ஒரு மாவட்டத்தில் கூட சூரிய ஒளி பூங்கா அமைக்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளைக் கூட திமுக அரசு மேற்கொள்ளவில்லை” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் ஆகியவற்றைத் தயாரிப்பதற்கான வளங்கள் தமிழகத்தில் ஏராளமாக இருந்தாலும், அந்த வகை மின்சாரங்களின் ஒட்டுமொத்த மின்னுற்பத்தியில் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த தமிழகம் இப்போது மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மரபுசாராத மின்னுற்பத்தித் திட்டங்களை செயல்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும் போதிய கொள்கைகளும், வழிகாட்டுதல்களும் இல்லாதது தான் இதற்கு காரணம் ஆகும். இது தமிழக அரசின் படுதோல்வி ஆகும்.