திருவள்ளூர்: கடந்த இரு வாரங்களுக்கு முன்பு காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் பட்டா வழங்க கோரி மாவட்ட அலுவலரிடம் மனு பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். பூந்தமல்லி ஒன்றியம், நெமிலிச்சேரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பூவை மு.பாபு தலைமையில் 600க்கும் மேற்பட்டோர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமாரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நெமிலிச்சேரி ஊராட்சியை சேர்ந்த நாகாத்தம்மன் நகர், அண்ணா நகர் மற்றும் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 641க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகளை கட்டி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகிறோம். தங்கள் வீட்டுக்கு மின் இணைப்பு, குடிநீர் வசதி, எரிவாயு இணைப்பு, அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்தி, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை பெற்றும் வசித்து வருகின்றோம்.
மேலும், நெமிலிச்சேரி ஏரி விவசாய பாசனத்திற்கும் மக்கள் குடிநீருக்கும் எதற்கும் பயனற்று உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஏரியை உடைத்து ஏரியின் நடுப்பகுதியில் அரசால் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டு 10 ஏக்கருக்கும் மேலாக நீர் நிலை நிலம் கையகப்படுத்தப்பட்டு அந்த ஏரி இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பகுதியை ஒட்டி வாழும் மக்களை நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் வசிப்பதாக கூறி வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த வாரம் நோட்டீஸ் வழங்கி அப்பகுதியில் இருந்து காலி செய்யுமாறு தெரிவித்துள்ளனர். எனவே தங்கள் பகுதிக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். மக்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த கூடாது என அந்த மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் ஊராட்சித் தலைவர் காந்தி, முன்னாள் துணைத் தலைவர் மதியழகன், வார்டு உறுப்பினர்கள் முருகன், தினேஷ், லோகநாதன், முன்னாள் வார்டு உறுப்பினர் கலா, முத்துக்குமார், மோகனா உள்பட 600 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடனிருந்தனர். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 600 க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் வந்ததால் கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில் பொதுமக்கள் மூடி வைத்திருந்த கதவை தள்ளிவிட்டு காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
The post காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் பட்டா வழங்க கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு: 600க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.