சென்னை: காவலர்களுக்கு ஊதிய உயர்வு உள்பட காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு காவல்துறையில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து அரசுக்கு பரிந்துரை வழங்குவதற்காக 2022 பிப்ரவரி 16ம் நாள் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் 5ம் காவல் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் பின் 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், கடந்த ஜனவரி 3ம் தேதி தான் ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய காவல்படை, பிற மாநில காவல் படைகள் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் மிகக் குறைவாக இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.18,200-ரூ.52,900 மட்டுமே வழங்கப்படுகிறது. இதை குறைந்தபட்சம் ரூ.21,700 – 69,100 என்ற நிலைக்கு உயர்த்த வேண்டும்; காவலர் தேர்வின் போது, ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டும்தான் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்கான காவலர் நலத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை காவல் ஆணையம் வழங்கியுள்ளது.
அவை மிகவும் நியாயமான பரிந்துரைகள். காவல் ஆணையத்தின் அறிக்கை கடந்த ஜனவரி 3ம் நாள் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் இன்று வரை 54 நாட்கள் நிறைவடைந்து விட்டன. காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்து இந்த கால இடைவெளியில் உறுதியான மற்றும் தெளிவான முடிவுகளை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும். இந்தியாவின் சிறந்த காவல்துறை தமிழக காவல்துறை தான் என்று தமிழக அரசு மார்தட்டிக்கொள்கிறது.
ஆனால், இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களை விட தமிழ்நாட்டில் காவலர்களுக்கு மிகக் குறைவான ஊதியம் மட்டும்தான் வழங்கப்படுகிறது. காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.
The post காவலர்களுக்கு ஊதிய உயர்வு உள்பட காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.