சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள் குடும்பத்தினருக்கு 1 மாதம் கணினி மற்றும் 3 மாதங்கள் தையல் பயிற்சி வகுப்புடன், சிறந்த நிறுவனங்களில் பணிபுரிய நேர்முக தேர்வு நடத்தி, பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் வழங்கி பாராட்டினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் அவர்களின் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் கரங்கள் மற்றும் Shine Trust இணைந்து, சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குடும்ப உறுப்பினர்கள், பணியின்போது உயிரிழந்த காவல் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் காவல் அலுவலகங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் குடும்ப உறுப்பினர்களில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு, கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) அவர்களால் 03.02.2025 அன்று முதல் ஆயுதப்படை வளாகத்தில், 1 மாதம் கணினி பயிற்சி வகுப்பு மற்றும் 3 மாதங்கள் தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு, அரசு திறன் நிலை மேம்பாட்டு மைய வழிகாட்டுதல்படி, திறன் வாய்ந்த பயிற்று நபர்களால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.
இதில் முதற்கட்டமாக கணினி வகுப்பிற்கு 30 நபர்களும், தையல் பயிற்சி வகுப்பிற்கு 90 நபர்களும் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்புகள் முடிவடையும் நிலையில், பயிற்சியாளர்களுக்கு Nirman NGO, TNEB, Atribs, Layam, Appolo sindoori, usam technologies ,Vishnu sales ஆகிய 7 தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
இன்று (17.04.2025) காலை, வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி, பயிற்சி வகுப்பு முடித்த காவல் குடும்பத்தினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல், துணை ஆணையாளர் (நலன் மற்றும் எஸ்டேட்) D.N.ஹரிகிரன் பிரசாத், திருமதி G.சுப்புலட்சுமி (நிர்வாகம்), M.ராதாகிருஷ்ணன் (ஆயுதப்படை), Shine Trust நிறுவனர் புவனேஸ்வரி சரவணன், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
The post காவல் ஆளிநர்கள் குடும்பத்தினருக்கு கணினி, தையல் பயிற்சி வகுப்புகளில் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு appeared first on Dinakaran.