ராமநாதபுரம்: கிடப்பில் போடப்பட்ட காரைக்குடி-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டத்தை மத்திய அரசு வரும் பட்ஜெட்டிலாவது நிதி ஒதுக்கி நிறைவேற்றுமா என தென்மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள பல முக்கிய நகரங்கள், புனித தலங்களுக்கு ரயில் போக்குவரத்து என்பது எட்டாக்கனியாக உள்ளது.
அதிலும் தொழில் வளம் இல்லாத பின்தங்கிய மாவட்டம் என பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தின் தொண்டி, தேவிபட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி உள்ளிட்ட பகுதி மக்கள் இதுவரை ரயில் பாதையை கண்டதில்லை. அதனால், நீண்ட காலமாக கிழக்கு கடற்கரை வழியாக ரயில் பாதை அமைக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மக்கள், வியாபாரிகள், எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.