சென்னை: “தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 12 மசோதாக்கள் கடந்த இரண்டு வருடங்களாக ஒப்புதல் தராமலும், எந்த முடிவும் எடுக்காமலும் முடக்கி வைத்திருக்கிறார். இத்தகைய மசோதாக்களில் உயர்கல்வித்துறை, சிலர் மீது வழக்கு தொடுக்க அனுமதி, சிறை தண்டனை குறைப்பு, அரசு ஆணைகளுக்கான ஒப்புதல் தராமல் நிலுவையில் உள்ளன. மேலும், பல்கலைக் கழகங்களுக்கு கடந்த மூன்று வருடங்களாக துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல் உள்ள நிலையில் அதற்கான தேடுதல் குழுவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்கட்சிகளால் ஆட்சி செய்யப்படுகிற மாநிலங்களில் ஆளுநர்களின் போக்கு அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக தொடர்ந்து இருந்து வருகிறது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சட்டசபையில் மசோதாக்களாக நிறைவேற்றி ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்படுகின்றன. அப்படி தமிழக சட்டப்பேரவையால் அனுப்பப்பட்ட 12-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் கடந்த மூன்று வருடங்களாக ஆளுநர் ஆர்.என்.ரவியால் எந்த முடிவும் எடுக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.