விருதுநகர்: கிணற்றில் தவறி விழுந்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர், தாய் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே மடத்துபட்டியை சேர்ந்தவர் ராஜா (41). மனைவி மகேஸ்வரி (36). ஒரு மகன், மகள் உள்ளனர். மகேஸ்வரி நேற்று காலை வீட்டின் பின்புறம் உள்ள விவசாய கிணற்று படிக்கட்டில் அமர்ந்து துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்த அவர், கல் திட்டை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு கணவர் ராஜா, தாய் ராஜம்மாள் (57) ஆகியோர் ஓடி வந்தனர்.
மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்த ராஜா தண்ணீரில் தத்தளித்தார். மருமகனை காப்பாற்ற ராஜம்மாளும் கிணற்றில் குதித்தார். இதில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். அப்போது அங்கு வந்த பொதுமக்கள், கல் திட்டை பிடித்து கொண்டிருந்த மகேஸ்வரியை பத்திரமாக மீட்டனர். தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் வந்து ஒரு மணி நேரம் போராடி ராஜம்மாள், ராஜாவின் உடல்களை மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post கிணற்றில் தவறி விழுந்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர், தாய் பரிதாபச் சாவு appeared first on Dinakaran.