தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. தாராபுரம் நகராட்சியில் 2024-25ம் ஆண்டுக்கான வீட்டு வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை உள்ளிட்ட பல்வேறு வரி இனங்கள் வீடு, வீடாக சென்று வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் கட்டணம் செலுத்தாத உடுமலை சாலை பகுதியை சேர்ந்த 2 வீடுகளில் குடிநீர் இணைப்பை தாராபுரம் நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் முத்துலட்சுமி, கமலவாணி ஆகியோர் முன்னிலையில், நகராட்சி அலுவலக ஊழியர்கள் இன்று காலை துண்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் கூறியதாவது: பொது மக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் ,தொழில் வரி உள்ளிட்ட வரியினங்களை உடனடியாக செலுத்தி, குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
மேலும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை நீண்ட காலமாக செலுத்தாதவர்கள் பெயர்ப் பட்டியலை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இது தவிர அவரது சொத்துக்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு பொது ஏலத்தில் விட்டு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகைக்கு ஈடு செய்யப்படும், இதற்கான விளம்பர பிளக்ஸ் தயாராக உள்ளது. எனவே பொதுமக்களில் வரி செலுத்தாதவர்கள் நகராட்சியின் நடவடிக்கைகளை தவிர்க்க விரைவாக நிலுவையில் உள்ள அனைத்து வரி இனங்களையும் நகராட்சிக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளில் இணைப்பு துண்டிப்பு: தாராபுரம் நகராட்சி அதிரடி appeared first on Dinakaran.